28/9/09

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!! - திலீபன்



திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார்.
இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார்.
திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன.

தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09.1987) தொடங்கினார்.
அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன?
1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும்.
5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர்.




அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன்.

பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள்.

மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார்.

அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.

முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20.

இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை.
மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார்.
இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது.

"அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்''
அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார்.

மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன்.
"இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன்.
"வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.'
சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார்.
"தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர்.
"என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது.

3-ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.

நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24.

நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.

1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.
ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது.

கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர்.
"கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார்.
மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர்.

யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.
ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர்.
எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது.

வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரத்த அழுத்தம் 80/50.
நாடித் துடிப்பு 140.
சுவாசம் 24.

இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை.

தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.

பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.
நாடித்துடிப்பு 52.
ரத்த அழுத்தம் 80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம்.
நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள்.

பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது.

யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.
பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது.



265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது.
எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்




இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 07.07.1859இல் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி ஓடியது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியது. அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

இரட்டைமலை சீனிவாசன் 1939இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும்அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்பபன மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார் 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார்.

இதே காலகட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892இல் அதை ஆதித் திராவிட மகானசபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டு காந்திக்குத் தமிழையும், திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

இவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917இல் ஆதித் திராவிட மகாசபை எம்.சி.இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1936வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன.)

இரட்டைமலை சீனிவாசன் 1921இல்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார். அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலின் போது 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன் எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசாயின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

22.08.1924இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 கெசட்டில் (பழழெ) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்ளாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமா அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம் மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர் (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 19, பக்கம் 822-830)


இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922இல் எம்.சி.இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாயை எண் 817, 25.03.1922இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280)

உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896)


இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-22 பகுதி-1 பக்கம்-351)

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் அவர்களைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி.வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி.ஐ.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்.சிவராஜ் சிறப்புரையாற்றினார்.


இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.


இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு ் 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது.
ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்துவார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார். எம்.சி.மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசுவார்கள்.

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 50, பக்கம் 391 – 392)

1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இவருக்கு இருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அண்ணல் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 18,19)

இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 168,174)
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

டாக்டர் சுப்பராயன் 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார்.

இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19பேர் நடுநிலையாகவும் இருந்தனர். எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காததால் இதைச் சட்டமாக்க முடியாமல் போய்விட்டது.

இரட்டைமலை சீனிவாசனை அவர்களை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டாரே என்ற கோபத்தில் எம்.சி.இராசா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும்காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.

அண்ணல் அம்பேதகர் அவர்கள் 1935இல் மதமாற்றம் பற்றி அறிவித்தபோதும் கூட இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடைய மனம் நோகாமல் மெதுவாக ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்த தலைவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று மறைவுற்றார்.

19/9/09

பெரியார் 131வது பிறந்தநாள்


மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

என பெரியார் அறிவுறுத்தியது மாந்தனின் அடிமை வாழ்நிலையை கண்டு சினந்தெழுந்த சிந்தனையாலேயே!


1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஆட்டைகள் கொண்டாடிய போது இல்லை! இது மக்களின் விடுதலை நாள் இல்லைஅடித்தட்டு மக்களின் வாழ்வை அடிமைப்படுத்தி சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்கர்களுக்கான அதிகார மாற்றம் என அறிவித்தவர்.


1930இல் ஒரு மாநாட்டில் பேசும்போது இந்தியா ஒரு தேசமல்ல அது பல தேசங்களை அடக்கி இணைத்து வைத்துக்கொண்டுள்ள ஒரு நாடு என அறிவித்தவர்



1946இல் வெள்ளையர்களால் இந்தியாவுக்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த இடைக்கால அரசாங்கம் 1947க்குப் பின் வெள்ளையர்கள் மற்றும் ஆதிக்க வடவர்களின் நலன்களுக்கான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது. அப்படி எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வெள்ளையர்களால் இடைக்கால அரசாங்கமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950இல் அந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசாக 1950இல் அறிவிக்கப்பட்டது. அதை அன்றைய தேதியிலிருந்து எதிர்த்தும், மறுத்தும் 27 ஆண்டுகாலமாக போராடியவர் பெரியார்.


இவர்களுடைய அரசியலமைப்புச் சட்டத்தால் செல்வர்கள் இறுமாப்பும், ஏழைகள் இழிவும், இந்துக்கள் எனப்படுவோர் அச்சமும், முஸ்லீம்கள் ஐயமும், தாழ்ந்த சாதியினர் நடுக்கமும் மேலும் அடிமைத்தனமுமே நீடிக்கும் என பேசிவந்தார்.


இதற்காகவே இந்தியாவை எதிர்த்தார். தமிழ்நாடு தமிழருக்கேஎன முதல் முழக்கத்தை வைத்தவர் பெரியார்!

அவரது இந்திய எதிர்ப்பை நாமும் முன்னெடுப்போம்!

அனைத்து நிலைகளிலும் சம உரிமை கோரும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தோள்கொடுப்போம்!



7/9/09

வியத்நாம் விடுதலைப் போராளி தோழர் ஹோ-சி-மீன் நினைவு நாள் 03.09.09

ஆசியப் புரட்சியின் மாபெரும் தலைவர் ஹோ-சி-மின் மூன்று பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறு ஏழை நாட்டை பாட்டாளி வர்க்க அரசியலில் திரட்டி மகத்தான வெற்றி கண்டவர்.

ஆசிய நாடுகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கட்டப்படவேண்டும், ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடி ஹோசிமின்னிடம் இருந்துதான் கற்க முடியும். ஏனெனில், ஹோ-சி-மின்னின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது. முரணற்றது. மார்கஸியம் ஹோசிமின்னின் எளிமையான தூய வாழ்வு மூலம் புதிய பரிணாமத்தை அடைந்தது.

புரட்சிகர அரசியலில் தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்ட நலன்களும், ஒருங்கிணைந்தது. அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தோடு பின்னிப் பிணைந்தது. இந்த மார்க்சிய கோட்பாட்டை வியட்நாமிய மக்களிக் வாழ்க்கையோடும் – மரபோடும் படைப்பாக்க ரீதியில் இணைத்து வெற்றி கண்டவர் ஹோ-சி-மின். அதற்கான புரட்சிக் கட்சியை அவர் கட்டியதுதான் வீர வியட்நாமின் ஆக்கத்துக்கு அடிப்படை. அவர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலக முழுமைக்குமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிற்பிகளில் போற்றுதலுக்குரியவர், கற்றறிதலுக்கான மாபெரும் ஆசான்.

வியத்நாமில் கியான் வட்டாரம் புகழ்பெற்றது. நமது பாஞ்சாலங்குறிச்சி மண்ணைப்போல் வீரம் செறிந்தது. அங்கு வாழ்ந்தவர்கள் வலிமையானவர்களாகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அங்க வாழ்ந்த பலரின் புகழ் நிலைத்து நிற்கிறது. அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து ஆயுதமேந்தி எப்போதும் முன்னணியில் நிற்பவர்கள் இவ்வட்டரத்தினர்தான். பிரெஞ்சு காலனியாதிக்கத்திற்கு எதிராக பல தேசிய இயக்கங்கள் இங்கிருந்தே தொடங்கின.
அந்த வட்டாரத்தில் சிம்லியன் என்னும் அழகான சிற்றூர் உள்ளது. சிம்லியன் என்றால் தங்கத்தாமரை என்று பொருள். அங்கு வாழ்ந்த குயென்சின்சாக் என்பவர்தான் அவ்வூரிலேயே அதிகம் படித்தவர். கன்பூசிய தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அவர், சிவில் நிர்வாகத்துறைக்கான உயர் படிப்பில் ப்யோ-பாங் பட்டம் பெற்றிருந்தார். தங்கள் ஊரின் முதல் ப்யோ-பாங் ஆன குயென்சின்சாக்கை பாராட்ட விரும்பிய அவ்வூர் மக்கள் வீடுகட்ட இடம் ஒதுக்கி, ஒரு புது வீடும் கட்டிக் கொடுத்தனர்.

1890 மே மாதம் 19ம் நாள் தனக்குப் பிறந்த குழந்தைக்கு குயென் டாட்தாங் எனப் பெயரிட்டார் குயென் சின்சாக். இக் குழைந்தைதான் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற டாக்டர் ஹோ-சி-மின்.
கன்பூசியனிக் கட்சியின் தேசிய இலட்சிய உணர்வுகளை டாட்தாங்கிற்கு ஊட்டி வளர்த்தார் தந்தை. டாட்தாங்கும் கன்பூசினிசத் தத்துவக் கருத்துக்களையும் அரசியல் பார்வையையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார். சிம்லியனில் வாழ்ந்த மக்கள் மிகவும் ஏழைகள் மிகக் கடின வாழ்வு வாழ்ந்து வந்தனர். இருப்பினும் அரசு அதிகார்கள் அவர்களிடம் இரக்கமற்ற முறையில் வரி வசூல் செய்தனர். அதே சமயம் ஆடம்பர வாழ்வு வாழ்ந்த அரச குடும்பத்தினரையும், வெளிநாட்டு அதிகாரிகளையும் டாட்தாங் பார்த்தார். உணர்ச்சி வயப்பட்ட டாட்தாங் ”ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?” என்று யோசிக்க ஆரம்பித்தார்.
அந்தச் சமயத்தில்தான், வியத்நாம்-லாவோ எல்லையை ஒட்டி கியாதாவோ சாலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வந்தது. மனிதன் நுழைந்திராத காட்டுக்குள் அச்சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களும் அத்திட்டத்தில் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கப் பட்டார்கள். கால் வயிற்றுக்கு உணவுமில்லை, உறங்க இடமுமில்லை. கொடுரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்ட மக்கள் பலர் தப்பியோடினர். அவர்களைப் படை வீரர்கள் வேட்டையாடினர். தனக்கு ஊர்க்காரர்கள் கொடுத்த நிலத்தையும் வீட்டையும் டாட்தாங்கின் தந்தை விற்றார். அப்பணத்தை சாலைப் பணிக்குச் சென்ற உழைப்பாளர்களின் நலிந்த குடும்பங்களுக்குக் கொடுத்தார். இது டாட்தாங்கின் உள்ளத்தல் பாதிப்பை ஏற்படுத்தியது.
14 வயதாகியிருந்த டாட்தாங் ழீன் ழாக்ருசோ என்ற பிரெஞ்சு அறிஞரின் படைப்புகளைப் படித்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக அந்நூல் விடுத்த அறைகூவல் அவரைக் கிளர்ச்சியுற வைத்தது.
1905ல் ஏற்பட்ட ரஸ்சியப் புரட்சியன் தாக்கம் வியத்நாமிலும் வெளிப்பட்டது. வியத்நாமில் தேசிய விடுதலை இயக்கம் பரவ ஆரம்பித்தது. 1908ல் ஃபான் பாய்சௌவின் ஆதரவாளர்களால் “நாட்டின் வாழ்வையும் உணர்வையும் புதுப்பிப்பதற்கான இயக்கம்“ தொடங்கப்பட்டது. மத்திய வியத்நாம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சாரிசாரியாக விவசாயிகள் வீதிக்கு குடும்பத்தோடு வந்து போராட்டத்தில் குதித்தனர். வரிகளைக் குறைக்க வேண்டுமென்றும், கட்டாய உழைப்பை ஒழிக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் முனடவைக்கப்பட்டன. டாட்தாங்கின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் பலர் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். டாட்தாங் அரசியல் போராட்டத்தில் முதல் அனுபவத்தைப் பெற்றார். அப்போராட்டம் நசுக்கப்பட்ட காட்சிகளை கண்ணெதிரே பார்த்தார்.
எதையும் தாங்கும் மனஉறுதியும் வலிமையும் கொண்டவர்கள்தான் பக்குவப்பட்ட போராட்டக்காரர்களாக மாறமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார். தான் செல்ல வேண்டிய பாதை எது எனடபதை அறிந்து கொண்டார். இனி மக்களோடு வாழ்வதும் அவர்களுக்காகப் போராடுவதுமே தனது இலட்சியம் என முடிவெடுத்த டாட்தாங், நாடு முழுவதும் பயணம் செய்து நாட்டு நடப்பை நேரடியாக அறிந்துகொள்ள முடிவெடுத்தார். இப்போது அவருக்கு வயது 18.
ஹ்யூவிலிருந்து தென்சீனக் கடற்கரையோரமாக நடந்தே பயணத்தைத் தொடர்ந்தார். அவ்வ்பொழுது சில நகரங்களிலும், கிராமங்களிலும் தங்கிப் பயணம் செய்தார். குயினோன்னில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இரண்டாண்டுகளில் ஐநூறு கிலோமீட்டருக்கு மேல் பயணித்து பான்தியேட் நகர் வந்து சேர்ந்தார். அங்கு தனியார் பள்ளியொன்றில் ஆசிரியப் பணி கிடைத்தது.
அந்த ஊரில் அதிக நாட்கள் தங்கவில்லை. 1910ம் ஆண்டு இறுதியிலேயே சைகோன் வந்து சேர்ந்தார். அங்கு கப்பல் ஓட்டுநர் பயிற்சிக் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

கப்பல் பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே உலகை இரண்டு முறைவலம் வந்துவிட்டார். விடுதலை,சமத்துவம் என்று அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தாலும், வறுமையும், அநீதியும் அம்மண்ணில் மலிந்திருப்பதைக் கண்டார். கறுப்பர்கள் ஒடுக்கப்படுவதும், பாகுபாடுபடுத்தப்படுவதும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்குப் பயணமானார்.
1917 இறுதியில் பிரான்ஸ் போய்ச் சேர்ந்தார். அங்கு ஒரு புகைப்பட நிறுவனத்தில் உதவியாளராகப் பணியேற்றார். பாரிசில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட வியத்நாமியர்கள் குடியிருப்புப் பகுதிக்கு அடிக்கடி டாட்தாங் செல்வார். வியத்நாமியர்கள் தேசபக்தர்கள் சங்கத்தை உருவாக்கி, அனைவரையும் அதில் ஈடுபடுத்தினார். 1918 இறுதியில் பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். இவரே முதல் வியத்நாமிய சோசலிஸ்ட் உறுப்பினர்.
கட்சிக்காக குயென் அய்கோக் என்ற பெயரை 1919 துவக்கத்திலேயே வைத்துக் கொண்டார். பிரெஞ்சு தூதரை அவரது வீட்டில் சந்தித்து இந்தோ சீன மக்களின் சார்பில் கோரிக்கை மனுகொடுத்தார் குயென் அய்கோக். ”வியத்நாமிய மக்களின் கோரிக்கைப் பட்டியல்” என்று தலைப்பிடப்பட்டிருந்த அம் மனுவில் தங்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் எனக் கேட்டிருந்தார். மேலும் வியத்நாம் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு, வியத்நாமியர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள், பத்திரிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, முறையான நீதிமன்றம், பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் வியத்நாமிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரப் பிரநிதி என்று பல கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
வியத்நாம் மக்களின் கோரிக்கைப்பட்டியல் வியத்நாமின் தென்பகுதியிலுள்ள கொச்சின் சீனா, மற்றும் இந்தோ சீனப் பகுதிகளுக்கு கப்பல் மூலம் அனுப்ப்பட்டு பரவலாக மக்களைச் சென்றடைந்தது. அப்பகுதி ஆட்சியாளர்கள் கதிகலங்கிப்போய் குயென் அய்கோக் என்று கையெழுத்திட்டு இருக்கும் அந்த நபரைத் தேடி அலைந்தார்கள்.
அவரது அணுகுமுறைகளெல்லாம் புரட்சிகரமாக இருந்தன. சோவியத்து யூனியனின் வெற்றியைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வியத்நாமிய விடுதலையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பார்த்த செயல் வீரர் குயென்.
வளர்ச்சியுற்ற நாடுகள் மற்றும் காலனிய நாடுகளில் உள்ள புரட்சிகர இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று லெனின் குறிப்பிடப்பட்டிருந்தது குயென்னின் மனதில் ஆழப்பதிந்தது. மூன்றாம் அகிலத்தின் இணைப்புக் குழுவில் உறுப்பினர் ஆனார்.
பிரான்சும் பிற ஐரோப்பிய நாடுகளும் சோவியத் நாட்டின் மீது தடை விதித்திருந்த சமயம், ரஸ்யாவிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் தெருக்களில் தன் நண்பர்களுடன் நிதி வசூலித்தார் குயென். பிரெஞ்சு அரசு உதவியோடு அவர் வியத்நாமுக்குப் பயணமானார்.
1921 ஜுலையில் சர்வதேச காலனி நாடுகள் லீக் என்னும் அமைப்பை உருவாக்கினார். அடிமை நாடுகள் சுதந்திரமடைய பாடுபடுவதே இதன் நோக்கம். லேபரியா என்ற செய்தித்தாள் ஒன்றை வெளியிட்டார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கண்டவாறு பழித்தெழுதும் முதாளித்துவ ஏடுகளுக்கு லேபரியா தகுந்த பதிலளித்து வந்தது. மார்க்சின் சிந்தனைகளைப் படியுங்கள் அமைக்கப்பட்ட நமது நாட்டு விடுதலைக்கு கம்யூனிசம் மட்டுமே வழிகாட்டும் என லேபரியா அழுத்தமாகக் கூறியது.
குயென் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். லேபரியாவில் தொடர்ந்து தமது கருத்துக்களை எழுதி வந்தார்.

பிரெஞ்சு நாட்டில் குயென்னின் அரசியல் நடவடிக்கைகள் ஆபத்தானவை என்று அரசு உணர்ந்தது. அவருடைய இயக்கங்களும், எழுத்துக்களும் ஒடுக்கப்பட்டவர்களிடையே உணர்வூட்டிக் கொண்டிருந்தன. எனவே அவரைக் கைது செய்து வியத்நாமுக்கு அனுப்பி விட விரும்புவதாக காலனிய விவகார அமைச்சர் ஆல்பர் சார்ரத் தெரிவித்தார். இந்தோசீன ஆளுநர் அதனைக் கடுமையாக எதிர்த்தார். எனவே பாரிசில் இருந்து பெர்லின் சென்றடைந்த குயென்னை ஜெர்மன் தோழர் ஒருவர் வரவேற்றார். ட்ரான் வாங் என்ற பெயரில் குயென்னுக்கு அனுமதிச் சீட்டு வாங்கி பெட்ரோகிரேடுக்குக் கப்பல் மூலம் அனுப்பிவைத்தார். 1923 ஜுன் 30ம் நாள் முதன்முதலாக சோவியத் யூனியனுக்குள் நுழைந்தார்.
கோமின்டெர்மினின் கிழக்கிந்தியப் பிரிவில் குயென்னுக்கு வேலை கொடுக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவாய் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்த அந்த நாட்டிலிருந்துதான் தன் சொந்த நாட்டின் விடுதலைக்கான பணியை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என முடிவு எடுத்தார்.
மாஸ்கோவிற்கு வந்த நாள் முதல் லெனினைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்து வந்தார். ஆனால் 1924 ஜனவரி ஆம் நாள் லெனின் மறைந்துவிட்டார்.
ஓராண்டு மாஸ்கோ வாழ்க்கை குயென்னுக்கு மிகுந்த அனுபவத்தை தந்திருந்தது. சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராக அனைவராலும் மதிக்கப்பட்டார். எத்தைகைய சிக்கலான பிரச்சனைகளுக்கும் திறமையாகத் தீர்வு காணும் ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். வியத்நாம் மக்களின் விடுதலையை உயிர்மூச்சாகக் கருதிச் செயல்பட்டார்.

எனவே, தென்சீனத்திற்குச் செல்ல விரும்பினார். அங்கு சன்யாட்சென் அரசு புரட்சிகரத்திட்டங்களை முன்வைத்து ஆட்சி செய்து வந்தது. சீனத்திற்கான கோமின்டெர்ன் பிரதிநிதி மிகெயில் பொரோடின், சன்யாட்சென்னின் அரசியல் ஆலோசகராக இருந்தார். தென்சீனம் சென்றவுடன் பொரோடினைச் சந்தித்தார் குயென்.
சோவியத் குடியரசுக் கப்பலில் நெடிய பயணம் செய்து கான்டன் நகரம் சென்றடைந்தார் குயென்.

முற்போக்குத் திசைவழியில் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளை வலியுறுத்தி நிற்கும் கோமின்டாங்குடன் சேர்ந்து போராடுமாறு சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டெர்ன் அறிவுறுத்தியது.
இந்தோசீனக் காலனியக் கொடுமைகளுக்குப் பயந்து எண்ணற்ற வியத்நாமியர் கான்டன் வந்திருந்தினர். அதேபோல் பிரான்சில் வாழ்ந்திருந்த வியத்நாமியர்கள் பலரும் கான்டன் வந்திருந்தினர். ஏற்கனவே கான்டன் அரசின் பலதுறைகளிலும் வியத்நாமியர்கள் அநேகம் பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். வியத்நாமிய தேசபக்தர்களோடும், புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர்களோடும் குயென் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அங்கு ”சிறப்பு அரசியல் கல்விக் குழு” என்ற பெயரில் அரசியல் பயிற்சி வகுப்பு ஒன்றை ஆரம்பித்தார்.
சமூக, தேசிய விடுதலையின் அவசியம், காலனியாதிக்கக் கொடுமைகள் ஆகியவற்றை தம் மக்கள் அறியச் செய்வதற்காக இளைஞன் என்னும் பொருள்படும் ”தான்நியென்” என்ற ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தார்.

கோமின்டெர்னின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வந்த வியத்நாம் புரட்சிகர இளைஞர் சங்க உறுப்பினர் தேர்வும், பயிற்சியும் குயென்னால் மிகக் கடுமையாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டப் பட்டது.
பயிற்சி பெற்ற இளைஞர்கள் தலைமறைவுப் பணி செய்ய இந்தோசீனத்திற்குள் அனுப்ப்பட்டனர். தலைமறைவுக்குழு, விவசாயிகள் சங்கம், தொழிலாளர் விவசாயிகளின் குழந்தைகள் கொண்ட இளம் முன்னோடிகள் குழு, புரட்சிகர பெண்கள் குழு ஆகியவற்றை படிப்படியாக உருவாக்கினார்.

அரசியல் பிரச்சாரப் பள்ளி ஒன்றைத் திறந்தார். மாணவர்கள் ரகசியமாக வந்து இதில் ஆறுவாரப் பயிற்சி பெற்று தங்களின் சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பிவிடுவர்.
1927 ஏப்ரலில் சியாங்கே சேக் ஆதரவாளர்களின் பயங்கர எதிர் நடவடிக்கைகள் அதிகரித்தன. கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர், சுட்டுக்கொல்லப்பட்டனர். கோமின்டாங் நிர்வாகக் குழுவினரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சோவியத் ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் குயென் கான்டனை விட்டு வெளியேறி சாங்காய் வழியாக கோபிப் பாலைவனத்தை நடந்தே கடந்து சோவியத் ரஸ்யா போய்ச் சேர்ந்தார்.
1927 டிசம்பரில் ரஸ்யாவில் நடைபெற்ற காலனிய எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு முடிந்ததும் அங்கிருந்து கப்பல் மூலம் தாய்லாந்து பயணமானார்.
ஹானோயிலும் சைகோனிலும் உள்ள கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து ஹாங்காங்கில் 1930 ஜனவரியில் நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் குழுக்கள் அனைத்தும் ஒன்றினைவது என்றும் இனிமேல் ஒரே கம்யூனிஸ்ட் கட்சிதான் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்படுத்தினார். இப்படியாக வியத்நாம் கம்யூனிஸ்ட் கடசி உருவானது. கட்சி உருவானபோது அதன் உறுப்பினர் எண்ணிக்கை 211. நாடெங்கிலும் கட்சிக் கிளைகள் தொடங்கப்பட்டன. கட்சியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பெருமளவு உறுப்பினராயினர்.
1930 இறுதியில் 116 கிராமங்கள் சேர்ந்து ரஸ்ய மாதிரி சோவியத்துக்களை உருவாக்கினார். ”கே-தின்” சோவியத்துகள் என்று அவை அழைக்கப்பட்டன. ஊர் தலைவர்களையும், நிலப்பிரபுக்களையும் விரட்டிவிட்டு கிராம மக்களே ஆட்சிப் பொறுப்பேற்றனர். பொது நிலங்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டன. பிரெஞ்சு அரசு விதித்த வரிகள் நீக்கப்பட்டன. ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த கே-தின் சோவியத்துகள் குறுகிய காலமே நீடித்தன. பிரெஞ்சு அரசு மீண்டும் இவைகளை முற்றுகையிட்டன.

இதனால் குயென் 1931 ஜுன் மாதத்தில் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னமே அரசு இவருக்கு மரணதண்டனை விதித்திருந்தது. அதனால் ஹாங்காங்கிலே வழக்கு நடந்தது. மரண தண்டனை விலக்கப்பட்டு அவர் இந்தோசீனாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என தீர்ப்பாயிற்று. ஆனால் 1932 ஜுனில் அப்பீல் செய்து மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு குயென் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அவர் தன் பணியினைத் தொடர சோவியத் வியாபாரக் கப்பலில் ஏறி மாஸ்கோ சென்றார். மாஸ்கோவில் கோமின்டெர்னின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று தனது பழைய நண்பர்களுடன் இணைந்தார்.
1935 ஜுலையில் கோமின்டெர்னின் 7வது மாநாடு தொடங்கியது. அதில் வியத்நாமில் ஜனநாயக முன்னணி உருவாக்கப்பட்டு செயல்படும் முறையை கோமின்டெர்னுக்கு அறிக்கையாகக் கொடுத்தார்.

1938ல் சோவியத் நாட்டைவிட்டு புறப்பட்டு கோபிப் பாலைவனம் வழியாக சீன எல்லை வந்தார். பிறகு ஆபத்தான மலைப்பகுதியில் வெறுங்காலுடனேயே நடந்து கடந்து மலைகள் சூழ்ந்த யேனான் பகுதிக்கு வந்து அங்கு தனது சீனத் தோழர்களுடன் இணைந்தார். பின் அனைவரும் எல்லைப் புறத்தில் உள்ள சிசி நகர் அடைந்து அங்கிருந்து வியத்நாதிற்குள் நுழைந்தனர்.

1941 மே 10 நாள் அடர்ந்த காட்டுக்குள் கட்சியின் பிளீனத்தைக் கூட்டினார். 10 நாட்கள் தொடர்ந்து அந்தப் பிளீனம் குயென் தலைமையில் உலகப்போரின் போக்குகள் குறித்தும், சோவியத் ரஸ்யா, ஜெர்மன் போன்ற நாடுகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர். ஜுன் மாதம் ஒரு அறிக்ககை வெளியிடப்பட்டது. அறிக்கை நாட்டின் அனைத்து இடங்களிலும் வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டது.
வியட்மின் இயக்கதத்தின் கெரில்லா தளங்கள் பல உருவாயின. அப்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பால் வியத்நாமின் வடக்கு தெற்கு பகுதிகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குயென் தனது பெயரை ஹோ-சி-மின் என மாற்றி வைத்துக் கொண்டார். ஹோ-சி-மின் என்ற பெயருடன் முதிர்ந்த சீன கம்யூனிஸ்ட் தோழர் ஒருவருடன் 10 நாட்கள் இரவும் பகலும் இடைவிடாது நடந்து சீனாவின் கியென்டங் வந்து சேர்ந்தார். பயணக்களைப்பில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஹோ-சி-மினை சீனப் போலிஸ் கைது செய்தது.

அவரை விடுதலை செய்யக்கோரி இந்தோசீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கங்களை நடத்தியது. 13 மாதகால சிறை வாழ்விற்குப்பின் ஹோ-சி-மின் விடுதலை செய்யப்பட்டார். பின் 1944 ஜுலையில் மீண்டும் வியத்நாம் திரும்பினார்.
வியத்நாம் சூழலில் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டம் இரண்டும் கலந்ததொரு திட்டமே சரியானதாக இருக்குமென்று முடிவுக்கு வந்த ஹோ-சி-மின் மக்களிடையே அரசியல் பிரச்சாரம் செய்ய விடுதலைப் பிரச்சார படை அமைக்க உத்தரவிட்டார். மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஆயுதபாணி ஆக்க வேண்டுமென்றும் அவர்கள் கொரில்லா போர் முறையை கையாள வேண்டுமென்றும் கூறினார். இதன்வழி ஆயுதமேந்திய முதல் அரசியல் பிரச்சாரக் குழு ஜெனரல் கியாப் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு முதல் தாக்குதலை பிரெஞ்சு சாவடிகள் மீது நடத்தி முதல் வெற்றியை ஈட்டியது. இம்முறை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

தொடர்ந்து சாதகமான சூழ்நிலை உள்ள இடங்களிலெள்ளாம் கொரில்லா தாக்குதலை நடத்தி அந்தப் பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 1945 ஏப்ரல் மாதத்தில் ஹனோய்க்கு வடக்கில் உள்ள பல மாநிலங்கள் புரட்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. மே மாதத்தில் ஹோ-சி-மினும் முக்கிய தோழர்களும் நீண்ட பயணம் செய்து தூயென்குவாங் மாநிலத்திலுள்ள டான்ட்ராவோ என்ற ஊரை கைப்பற்றி அதை தற்காலிகத் தலைநகராக ஆக்கிக் கொண்டு புரட்சி நடவடிக்கைளை தொடர்ந்தனர். டான்ட்ரோ நகரில் கட்சி மாநாட்டை ஆகஸ்ட் 13ம் நாள் கூட்டினார். மாநாடு ஆயுதம் தாங்கிய புரட்சி மூலம் ஆக்கிரமிப்பு அரசை அகற்றவும், ஜனநாயகக் குடியரசை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றியது.
மாநாட்டில் அமையப்போகும் குடியரசின் தேசியக் கொடியும் உருவாக்கப்பட்டது. ஹோ-சி-மின் தலைமையில் 11 பேர் கொண்ட தேசிய விடுதலைக் குழு அமைக்கப்பட்டது.
மாநாட்டு முடிவுப்படி விடுதலைப்படை ஆயுதபோராட்டத்தை தொடங்கியது. ஹனோய் உட்பட வடவியட்நாம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. ஹனோய் நகரில் ஆகஸ்ட் 19ம் நாள் இலட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. ஆகஸ்ட் 27ம் தேதி விடுதலைப் படையின் பெரும்பகுதி ஹனோய்க்கு வரவழைக்கப்பட்டது. அன்று புரட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. புதிய அரசின் தலைவராகவும் வெளியுறவுத்துறை அமைச்சாராகவும் ஹோ-சி-மின் பொறுப்பேற்றார். வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ஹோ-சி-மின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969 செம்டெம்பர் 3ம் நாள் தனது 79ம் வயதில் ஹோ-சி-மின் காலமானார்.

1/9/09

தோழர் தமிழரசனின் நினைவுநாளில் சூளுரைப்போம்!

தோழர்களே!

சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!

தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.

கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி AMK என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.

1975-ல் அரசு இவரை அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து தப்ப முயன்று பிடிபட்டார். பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.

1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.

1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.

மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர். திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.

இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.

1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.

டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.

தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” எனும் பெயரில் இயக்கம் கட்டி இயங்கத் தொடங்கினார். சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.

பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.

அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவரது இறப்பிற்குப் பின் தோழர் பொழிலன் உள்ளிட்ட சில தோழர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட்டனர்.

இதனால் கொல்லிமலை கூட்டத்தில் பிரிந்து சென்ற தோழர் சுந்தரம் ”தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி” எனும் பெயரில் செயல்பட ஆரம்பித்தார்.

தமிழக மக்கள் விடுதலைக்கான போரில் தனது உயிரை ஈந்த தமிழரசன் உள்ளிட்ட தோழர்களின் நினைவு நாளான இன்று அவர்களது முகாமைக் குறிக்கோளான சாதியொழிப்பை நெஞ்சிலேந்திப் போராட அனைவரும் சூளுரைப்போம்!

தோழர்களே

சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!