19/12/10

திருப்பூர் – ஊத்துக்குளிப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான காவல்துறையின் சாதி வெறியாட்டம்


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் இரயில் தண்டவாளங்களில் கற்கள் வைக்கப்படுகின்ற நிகழ்வை காவல் துறையினர் சிறப்புப் படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவங்களை ஒட்டி கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே ஊத்துக்குளி ஒன்றியம் ரெட்டிபாளையம், அய்யாமுத்துகாடு அருகில் இரயில் பாதையில் கல் இருந்ததாக அய்யாமுத்தான் காடு அருந்ததியர் காலனியைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 60-க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் ஒரு நாள் முழுவதும் காவல்நிலையத்தில் காலை முதல் இரவு வரை வைத்திருந்து அனுப்பப்பட்டனர்.

அதன் பின்பு மேற்கண்ட அய்யாமுத்தான் காடு அருந்ததியர் காலனியைச் சார்ந்த மக்கள், முறை வைத்து ஐந்து, ஐந்து குடும்பங்களாக ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் காலை முதல் இரவு 10 மணி வரை வைத்து பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறாக மொத்த அருந்ததியர்(சக்கிலியர்) காலனியிலும் விசாரணை 15 நாட்கள் நடந்தது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொது மக்களை சட்டவிரோதமாகத் துன்புறுத்துவதாக சாலை மறியல் செய்தனர். அதன் பின்பு பீகாரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல்நிலையத்தில் வைத்து தளவாய்பாளையத்தைச் சார்ந்த 5 அருந்ததிய இளைஞர்களை ரயில்தண்டவாளத்தில் கல் வைத்தது தொடர்பாக அடித்து சித்திரவதை செய்து பின்பு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். அருந்ததியர் அரசியல் அமைப்புகளில் இணைந்துள்ளவர்களை விசாரணை என்ற பெயரில் ஊத்துக்குளி காவல்நிலையத்துக்கு வரவழைத்து பின் அவர்களின் புகைப்படங்களையும் மற்றும் கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்கண்ட இரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை தேடுகின்றோம் என்ற பெயரில் இரவு ரோந்து சுற்றும்போது ஊத்துக்குளி சுற்று வட்டாரப்பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் அருந்ததியர் சாதியினரை மட்டும் விசாரித்து விட்டு, அவர்களின் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கிக்கொண்டு, காலையில் காவல்நிலையம் வந்து வாகனத்தை பெற்றுச் செல்ல உத்தரவிட்டுள்ளனர். மேலும் சில அருந்ததியர் இளைஞர்களை இரவு முழுவதும் காவல்துறையினருடன் சேர்ந்து ரோந்து சுற்றவும் நிர்பந்தப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2010 அக்டோபர் மாதம் ஊத்துக்குளி பகுதி டாஸ்மாக் மதுக்கடையில் யாரோ இரயிலில் கற்களை வைத்தது தாங்கள்தான் என்று துண்டு சீட்டில் எழுதி வீசியதை வைத்துக்கொண்டு ஊத்துக்குளி பகுதியில் உள்ள அணைப்பாளையம், சாளைப்பாளையம், அய்யாமுத்துக்காடு, அருந்ததியர் காலனி, ரெட்டிபாளையம் என இப்பகுதியிலுள்ள காலனிகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஊத்துக்குளி காவல்நிலையம் வரவைத்து எழுதி காட்டச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

மேலும், இப்பகுதியில் ரோந்து சுற்றும் காவல்துறையினர் அருந்ததியர் காலனிகளுக்குள் வந்து இரவு நேரங்களில் மிகக் கேவலமான கெட்ட வார்த்தைகளால் சேரி மக்களைத் திட்டி இழிவுப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் மது போதையிலும் இருக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர் நிகழ்வாகவும் இருந்து வருகிறது. இச்சூழலில் 2010 நவம்பர் 26-ம் தேதி ஊத்துக்குளி அணைப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த பரமேஸ்வரன் என்பவரை அன்று இரவு 11 மணிக்கு காவல்துறை கைது செய்து ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கும், அதே ஊரைச்சார்ந்த காந்தி என்பவரை கைது செய்து பெருமாநல்லூர் காவல்நிலையத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

அடுத்த நாள் 27.11.2010-ம் தேதி மேற்கண்ட இருவரையும் காங்கேயம் அருகில் உள்ள நல்லூர் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளது காவல்துறை. பின்பு காந்தி என்பவரை மேற்கண்ட இரயிலில் தண்டவாளத்தில் கல் வைத்தது தாங்கள்தான் என்று ஒப்புக்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். அதற்கு காந்தி மற்றும் பரமேஸ்வரன் மறுத்துள்ளனர். இந்நிலையில் பரமேஸ்வரன் மற்றும் காந்தி இருவரின் கைகளையும் பின்னுக்குக் கட்டி ராட்டையில் தூக்குவது போல் காவல்நிலையக் கூரையில் தொங்கவிட்டுள்ளனர்.

வலி தாங்க முடியாத நிலையிலும், வேறு வழியில்லாமலும் காவல்துறை சொல்வது போல ஒத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். அதற்குப் பின்பும் பரமேஸ்வரனின் கால்களை அகல விரிக்கச் செய்து அதன் மீது போலீசார் ஏறி நின்று சித்திரவதை செய்துள்ளனர். காந்தியை கிரிக்கெட் ஸ்டெம்புகள் மீது படுக்கச்செய்து பின்னர் கிரிக்கெட் ஸ்டெம்புகளை நெஞ்சின் மீது வைத்து அதன் மீது காவல்துறையினர் ஏறி நின்று உருட்டியும் உள்ளனர். மேற்கண்ட தொடர் சித்திரவதைகள் இருவருக்கும் 27.11.2010, 28.11.2010 ஆகிய நாட்களில் நல்லூர் காவல்நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் நடந்துள்ளது.

அதன் பின்பு 29.11.2010 தேதியில் சித்திரவதை பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் முதல் உதவி பெற்று இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி, பின்னர் போத்தனூர் ரயில்வே காவல்நிலையத்தில் குற்ற எண்கள் 407/2009, 438/2010, 358/2010, 363/2010, 364/2010, 444/2010 ஆகிய வழக்குகளில் மேற்கண்ட இருவரையும் பொய்யாக இணைத்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விட்டனர்.

கைது செய்யப்பட்ட பரமேஸ்வரன் கைதுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 26.10.2010 தேதியில் தன்னை பொய் வழக்கில் சிக்க வைக்க காவல்துறை முயல்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக காவல்துறை தலைவர், தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு பதிவு தபாலில் மனு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவல்துறையின் அத்துமீறல் குறித்து திருப்பூரில் 10.12.2010-ம் அன்று ஆர்ப்பாட்டம் நடத்த மனித உரிமையாளர்கள் அனுமதி கோரியபோது அனுமதியை மறுத்துவிட்டது காவல்துறை.

இதற்குப் பின் 12.12.2010-ம் தேதி ஊத்துக்குளி இரயில் நிலையப்பகுதியில் யாரோ தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளனர். உடனடியாக ஊத்துக்குளி சாளைப்பாளையம், கரைப்பாளையம், குன்னாங்கல்பாளையம், வெங்கரைபாளையம், சுப்பனூர் பகுதியைச் சார்ந்த அருந்ததிய மக்கள் 50 பேரை விசாரணைக்கு என்று ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு நடு இரவில் அழைத்து வந்துள்ளனர். அவர்களை 13.12.2010 தேதி இரவு 7 மணி வரை வைத்திருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அழைத்து வந்தவர்களில் சுப்பனூர் பகுதியைச் சார்ந்த மணி, குண்ணாங்கல் பாளையம் மாணிக்கம், வெங்கலபாளையம் கதிரவன்(எ)ரங்கசாமி ஆகியோரை பொய்யாக இரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக இரயில்வே போலீசாரிடம் கொடுத்து பொய் வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்தியுள்ளனர்.

இரயில் தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கோ அருந்ததியர் சாதி மக்களுக்கோ வேறு கருத்து கிடையாது. கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரையினர் என்று வதை செய்த இழிவான வரலாற்றைப் போன்று, தற்சமயம் அருந்ததியர் சாதி மக்கள் மீது அத்தகைய கொடுமையைச் செய்ய முயன்று வருகிறது காவல் துறை.

ஊத்துக்குளி பகுதியில் உள்ள எல்லா அருந்ததியர் மக்களும் குற்றவாளிகளாக இழிவாக நடத்தப்படும் அவலம் நிகழ்ந்து வருகிறது. அதே சமயம் இப்பகுதியில் உள்ள பிற சாதியினர் மீது இந்த ஓடுக்குமுறை கிடையாது. ஆக சாதியப்பாகுபாட்டுடன் காவல்துறை நடந்து கொள்கிறது. இதுவே ஒரு தீண்டாமைக் கொடுமையாகும்.

காவல்துறையினர் நவீன கேமிராக்கள் உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப கருவிகளை தண்டவாளப்பகுதியில் பொருத்தி இரயில் தண்டவாளங்களை பாதுகாக்க வேண்டும். அறிவியல்ப்பூர்வமான புலனாய்வுக்கு அருந்ததியர் மக்களும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர். ஆனால் காவல்துறையினர் அருந்ததியர் தலைவர்களை, அச்சாதியில் உள்ள படித்த இளைஞர்களை இப்பொய் வழக்கில் பலிகடாவாக மாற்ற முயன்று வருகிறது. இது கைவிடப்பட வேண்டும்.

மேற்கண்டது மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவாகும். முதலில் பீகாரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தண்டவாளத்தில் கல் வைத்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இப்போது அருந்ததியர் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கற்கள் வைக்கப்படுவது நிற்கவில்லை. இந்த இருபிரிவு மக்களுக்கும் இடையே ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. காவல்துறை ஒரு பாவமும் அறியாத ஒடுக்கப்பட்ட மக்களையே குறிவைத்துத் தாக்கிவருகிறது. ஊத்துக்குளி வட்டாரமே இராணுவமுகாம் போல் மாற்றப்பட்டுள்ளது. இதுபோதுமான அளவுக்கு தமிழக மக்களின் கவனத்தைப் பெறவில்லை. எனவே தமிழக மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்காளர்களை இக்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

மக்கள் சிவில் உரிமைக் கழகம், கோவை

மக்கள் கண்காணிப்பகம், கோவை



டிசம்பர் 17.2010அன்று கள ஆய்வுக்காகச் சென்ற உண்மையறியும் குழுவினர்

வழக்குரைஞர் .பா.மோகன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

வழக்குரைஞர் கி. சிதம்பரம், மக்கள் சிவில் உரிமைக் கழகம்

வழக்குரைஞர் மாதவி, அவினாசி

தமிழழகன், தமிழக மக்கள் விடுதலை முன்னணி

மு.மோகன்ராசு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

புலி்.பாண்டியன், சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி

.இரத்தினசாமி, பெரியார் திராவிடர் கழகம்

குழல், மக்கள் வாழ்வுரிமைப் போராட்ட இயக்கம்

இரா.விசயகுமார், தமிழகத் தொழிலாளர் முன்னணி

பாலு, புரட்சிகர இளைஞர் முன்னணி

இளங்கோவன், தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி

குழந்தைவேல், சமூக ஆர்வலர்






















16/12/10

நீதிமன்றங்களும் மறுக்கப்படும் மனித உரிமைகளும் நூல் வெளியீட்டு விழா









வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் சட்டத்துணைவர்.அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக சட்டத்தைப் பயன்படுத்திச் செயல்பட்டு வரும் ஒரு செயல்வீரர். சாதிய ஒடுக்குமுறையானாலும், மனித உரிமை மீறலானலும், தேசிய இன உரிமை ஒடுக்குமுறையானாலும் அரசாங்கமும், காவல்துறையும் புனையும் பொய்வழக்குகளுக்கு எதிராகக் கீழமை நீதிமன்றங்களில் குறிப்பாக மாவட்ட நீதிமன்றங்களில் முன்நின்று வாதாடி வருபவர்.

தமிழக பழங்குடி மக்கள் சங்கமும், மக்கள் சிவில் உரிமைக் கழகமும் பிற மனித உரிமை அமைப்புக்களும், வீரப்பன் தேடுதல் வேட்டையில், காவல்துறையின் மோதல் கொலைகள், சித்தரவதைகள், வன்கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் காரணமாக பாதிக்கப்படோருக்காகத் தொடர்ந்து பல போராட்டங்களையும், இயக்கங்களையும் முன்னெடுத்த போது, முன்னணியில் நின்று தோள்கொடுத்தார்.

அவர் 17.1.2010 அன்று போபாலில் “தேசிய நீதித்துறைக் கழகத்தின்நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை இங்கு தந்துள்ளோம். மனித உரிமைமீறல் வழக்குகளில் மனித உரிமை நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்த அவருடைய கருத்துக்கள், அனுபவங்கள், ஆலோசனைகள் மிகவும் பரவலாக எடுத்துச்செல்லப்பட்டு விவாதிக்கப்படுவது மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்.

- மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை.



வெளியீடு.

மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

ஈரோடு, தமிழ்நாடு.

பேச 7373651155

27/11/10

நவம்பர் 27 மாவீரர் நாளில் மானமும் அறிவும் பயிற்சிப் பாசறையின் காசுமீர் ஒப்பந்தம் – சில வரலாற்று ஆவணங்கள் - நூல் வெளியீட்டு விழா


நூல் வெளியீட்டு விழா

நவம்பர் 27 மாவீரர் நாளில் தேசிய உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெறும் தேசிய உரிமைகளுக்கான போராட்டமும், ஒடுக்குமுறைகளும் கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்படுகிறது.

மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

ஈரோடு, தமிழ்நாடு.

பேச 7373651155

18/11/10

நவம்பர் 27 மாவீரர் நாளில் தேசிய உரிமைகளுக்கான போராட்டமும், ஒடுக்குமுறைகளும் - கருத்தரங்கம்

























இந்தியாவில் நீதியும் ஜனநாயகமும் – நீதியரசர் வி.ஆர் கிருஷ்ணய்யர் பார்வையில்...


இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் வி.ஆர் கிருஷ்ணய்யர் நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் ஒரு கோபங்கொண்ட இளைஞருக்குரிய சீற்றத்துடனும் அனுபவஞானம் கொண்ட ஒரு மூத்த அறிவாளியின் நிதானத்துடனும் ஆழ்ந்த தேசப்பற்றுடனும் ஒரு போராளிக்குரிய துணிவுடனும் கருத்துக்களை முன்வைத்து வருபவர்.

இந்தியாவில் சீரழிந்துவரும் ஜனநாயகத்தையும் நெறிபிறழ்ந்து வரும் நீதித்துறையையும் கடுமையாக விமர்சித்து வரும் அவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தின் மீதும் தனது கருத்துக்களை அஞ்சாது முன்வைத்து வருகிறார்.

புலமைமிக்க ஆங்கிலத்தில், தி இந்து நாளிதழில் அவ்வப்போது அவர் எழுதிவரும் கட்டுரைகளில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்துத் தமிழாக்கித் தந்திருக்கிறோம். வி.ஆர் கிருஷ்ணய்யரின் கட்டுரைகள் தமக்குத்தாமே விளக்கமாகி நிற்பவை. அவற்றின் உட்பொருளும் அவரது உள்ளக்கிடக்கையும் அவற்றை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் தெளிவாகப் புரியக்கூடியவை.

"சமூக பொருளாதார, அல்லது நீதியை நிறைவேற்றாத ஒரு அமைப்பின் போலியான உருத்தோற்றத்திற்கு இந்திய மக்கள் அடி பணிய மாட்டார்கள்

"அரசியல் அமைப்புச் சட்டம் ஏறத்தாழச் செத்துவிட்டது.....(மக்களுக்கு) இந்த அமைப்பில் நம்பிக்கையில்லை. ஒன்று அதனிடம் சரணடைய வேண்டும் அல்லது வன்முறையினாலோ, தீவிரவாதத்தினாலோ தூக்கியெறிய வேண்டும்.

"விக்டோரியா கால சட்டநெறி முறைகளுக்கு நாம் மரணசாசனம் எழுத வேண்டும். இந்தியாவின் தற்போதைய சட்டத்தைத் தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு புதிய இயங்காற்றல் கொண்ட சட்டநெறியை மறுஉருவாக்கம் செய்யத்தூண்டும் துணிவு நமக்கு வேண்டும்.

இந்தியாவில் இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பிண்மை, மக்கள் நாயகம், குடியரசு என அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிக்கப்பட்டுள்ள உயரிய விழுமியங்கள் தமது உண்மைப்பொருளை இழந்து போலியாகிப் போனதை எண்ணி இந்த அமைப்பின் மீதே அவர் நம்பிக்கையிழந்து வருவதை அவரது மேற்கூறிய கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவில் நீதியும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் வெளிவரும் அவரது கட்டுரைகளின் இத்தொகுப்பு புதிய சிந்தனைகளுக்கான தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வெளியீட்டைக் கொண்டுவருவதற்கு தனது அன்பான இசைவினை வழங்கிய நீதியரசர் வி.ஆர் கிருஷ்ணய்யர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

வெளியீடு.

மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

ஈரோடு, தமிழ்நாடு.

பேச 7373651155

8/6/10

நேபாளம் - தேச விடுதலையும் மக்கள் (ஜன) நாயகமும்


வொர்க்கர்ஸ் (WORKERS) எனும் இதழில் ஆங்கிலத்தில் வெளிவந்த நேபாள போராட்டம் குறித்த ஒரு அரசியல் கட்டுரையை தமிழில் நிழல்வண்ணன் மொழியாக்கம் செய்து அதனை வெளியிட்டுள்ளோம்.


வெளியீடு.

மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

ஈரோடு, தமிழ்நாடு.

பேச 9942575599