1/12/09

ஈரோட்டில் மாவீரர் நாள் நிகழ்வும் – காங்கிரசாரின் அராஜகமும்

கடந்த 27.12.2009 அன்று மாவீரர் நாள் நிகழ்வை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோட்டில் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக ஈரோடு நகரம் முழுக்க 20 தட்டிகளும் (Flex) சுவரொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. இவைகளில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் சுடர் ஏற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த காங்கிரஸ் ரவுடி, குடிகாரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு (எ) வெங்கடாஜலம் போன்றோர் அடியாள் படையுடன் வந்து அனைத்து தட்டிகளையும் அடித்து நொறுக்கி கிழித்து எறிந்தனர். மேலும் தட்டிகள் வைத்திருந்த அமைப்புத் தோழர்களை கொலை மிரட்டல் விடுத்தும் சென்றனர். செய்தியறிந்த ஈரோட்டிலுள்ள அனைத்து அமைப்புத் தோழர்களும் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஈ.வி.கே.எஸ். மீது வழக்குப் பதியச் சொல்லி புகார் அளித்தனர். ஆனால் இதுவரை அப்புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை பல்வேறு அமைப்புத் தோழர்கள் 21 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளது.
























14/10/09

தமிழீழப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்






மக்கள் உண்மை ( Peoples Truth) எனும் இதழில் ரவீந்திரன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய தமிழீழப் போராட்டம் குறித்த ஒரு அரசியல் கட்டுரையை தமிழில் நிழல்வண்ணன் மொழியாக்கம் செய்து அதனை வெளியிட்டுள்ளோம்


வெளியீடு
மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை
ஈரோடு – 638 001. தமிழ்நாடு.
பேச – 0091 98940 13138.

5/10/09

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுநாளில் சூளுரைப்போம்!



இந்திய பாசிச அரசின் சதியால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்.

 முதலாளித்துவ வெறி கொண்ட ஏகாதிபத்திய நாடுகளால் சிதைக்கப்பட்ட தமிழீழ நாட்டை மீட்டெடுப்போம்.

 சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை எதிர்ப்போம்.

 ஈழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

 மாவீரர்களின் கனவுகளை நனவாக்க தமிழீழ தேசிய விடுதலைப் போருக்குத் துணை நிற்போம்.

 வல்லரசுகளின் சதிகளை முறியடித்து இந்திய – சிங்கள அரசுகளிடமிருந்து தமிழகத்தையும் – தமிழீழத்தையும் மீட்டெடுப்போம்.

28/9/09

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!! - திலீபன்



திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார்.
இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார்.
திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன.

தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09.1987) தொடங்கினார்.
அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன?
1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும்.
5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர்.




அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன்.

பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள்.

மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார்.

அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.

முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20.

இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை.
மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார்.
இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது.

"அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்''
அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார்.

மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன்.
"இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன்.
"வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.'
சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார்.
"தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர்.
"என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது.

3-ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.

நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24.

நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.

1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.
ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது.

கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர்.
"கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார்.
மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர்.

யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.
ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர்.
எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது.

வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரத்த அழுத்தம் 80/50.
நாடித் துடிப்பு 140.
சுவாசம் 24.

இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை.

தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.

பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.
நாடித்துடிப்பு 52.
ரத்த அழுத்தம் 80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம்.
நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள்.

பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது.

யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.
பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது.



265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது.
எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்




இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 07.07.1859இல் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி ஓடியது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியது. அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

இரட்டைமலை சீனிவாசன் 1939இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும்அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்பபன மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார் 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார்.

இதே காலகட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892இல் அதை ஆதித் திராவிட மகானசபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டு காந்திக்குத் தமிழையும், திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

இவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917இல் ஆதித் திராவிட மகாசபை எம்.சி.இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1936வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன.)

இரட்டைமலை சீனிவாசன் 1921இல்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார். அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலின் போது 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன் எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசாயின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

22.08.1924இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 கெசட்டில் (பழழெ) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்ளாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமா அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம் மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர் (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 19, பக்கம் 822-830)


இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922இல் எம்.சி.இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாயை எண் 817, 25.03.1922இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280)

உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896)


இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-22 பகுதி-1 பக்கம்-351)

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் அவர்களைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி.வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி.ஐ.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்.சிவராஜ் சிறப்புரையாற்றினார்.


இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.


இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு ் 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது.
ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்துவார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார். எம்.சி.மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசுவார்கள்.

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 50, பக்கம் 391 – 392)

1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இவருக்கு இருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அண்ணல் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 18,19)

இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 168,174)
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

டாக்டர் சுப்பராயன் 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார்.

இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19பேர் நடுநிலையாகவும் இருந்தனர். எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காததால் இதைச் சட்டமாக்க முடியாமல் போய்விட்டது.

இரட்டைமலை சீனிவாசனை அவர்களை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டாரே என்ற கோபத்தில் எம்.சி.இராசா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும்காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.

அண்ணல் அம்பேதகர் அவர்கள் 1935இல் மதமாற்றம் பற்றி அறிவித்தபோதும் கூட இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடைய மனம் நோகாமல் மெதுவாக ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்த தலைவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று மறைவுற்றார்.

19/9/09

பெரியார் 131வது பிறந்தநாள்


மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

என பெரியார் அறிவுறுத்தியது மாந்தனின் அடிமை வாழ்நிலையை கண்டு சினந்தெழுந்த சிந்தனையாலேயே!


1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஆட்டைகள் கொண்டாடிய போது இல்லை! இது மக்களின் விடுதலை நாள் இல்லைஅடித்தட்டு மக்களின் வாழ்வை அடிமைப்படுத்தி சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்கர்களுக்கான அதிகார மாற்றம் என அறிவித்தவர்.


1930இல் ஒரு மாநாட்டில் பேசும்போது இந்தியா ஒரு தேசமல்ல அது பல தேசங்களை அடக்கி இணைத்து வைத்துக்கொண்டுள்ள ஒரு நாடு என அறிவித்தவர்



1946இல் வெள்ளையர்களால் இந்தியாவுக்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த இடைக்கால அரசாங்கம் 1947க்குப் பின் வெள்ளையர்கள் மற்றும் ஆதிக்க வடவர்களின் நலன்களுக்கான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது. அப்படி எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வெள்ளையர்களால் இடைக்கால அரசாங்கமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950இல் அந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசாக 1950இல் அறிவிக்கப்பட்டது. அதை அன்றைய தேதியிலிருந்து எதிர்த்தும், மறுத்தும் 27 ஆண்டுகாலமாக போராடியவர் பெரியார்.


இவர்களுடைய அரசியலமைப்புச் சட்டத்தால் செல்வர்கள் இறுமாப்பும், ஏழைகள் இழிவும், இந்துக்கள் எனப்படுவோர் அச்சமும், முஸ்லீம்கள் ஐயமும், தாழ்ந்த சாதியினர் நடுக்கமும் மேலும் அடிமைத்தனமுமே நீடிக்கும் என பேசிவந்தார்.


இதற்காகவே இந்தியாவை எதிர்த்தார். தமிழ்நாடு தமிழருக்கேஎன முதல் முழக்கத்தை வைத்தவர் பெரியார்!

அவரது இந்திய எதிர்ப்பை நாமும் முன்னெடுப்போம்!

அனைத்து நிலைகளிலும் சம உரிமை கோரும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தோள்கொடுப்போம்!