18/11/10

இந்தியாவில் நீதியும் ஜனநாயகமும் – நீதியரசர் வி.ஆர் கிருஷ்ணய்யர் பார்வையில்...


இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் வி.ஆர் கிருஷ்ணய்யர் நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் ஒரு கோபங்கொண்ட இளைஞருக்குரிய சீற்றத்துடனும் அனுபவஞானம் கொண்ட ஒரு மூத்த அறிவாளியின் நிதானத்துடனும் ஆழ்ந்த தேசப்பற்றுடனும் ஒரு போராளிக்குரிய துணிவுடனும் கருத்துக்களை முன்வைத்து வருபவர்.

இந்தியாவில் சீரழிந்துவரும் ஜனநாயகத்தையும் நெறிபிறழ்ந்து வரும் நீதித்துறையையும் கடுமையாக விமர்சித்து வரும் அவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தின் மீதும் தனது கருத்துக்களை அஞ்சாது முன்வைத்து வருகிறார்.

புலமைமிக்க ஆங்கிலத்தில், தி இந்து நாளிதழில் அவ்வப்போது அவர் எழுதிவரும் கட்டுரைகளில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்துத் தமிழாக்கித் தந்திருக்கிறோம். வி.ஆர் கிருஷ்ணய்யரின் கட்டுரைகள் தமக்குத்தாமே விளக்கமாகி நிற்பவை. அவற்றின் உட்பொருளும் அவரது உள்ளக்கிடக்கையும் அவற்றை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் தெளிவாகப் புரியக்கூடியவை.

"சமூக பொருளாதார, அல்லது நீதியை நிறைவேற்றாத ஒரு அமைப்பின் போலியான உருத்தோற்றத்திற்கு இந்திய மக்கள் அடி பணிய மாட்டார்கள்

"அரசியல் அமைப்புச் சட்டம் ஏறத்தாழச் செத்துவிட்டது.....(மக்களுக்கு) இந்த அமைப்பில் நம்பிக்கையில்லை. ஒன்று அதனிடம் சரணடைய வேண்டும் அல்லது வன்முறையினாலோ, தீவிரவாதத்தினாலோ தூக்கியெறிய வேண்டும்.

"விக்டோரியா கால சட்டநெறி முறைகளுக்கு நாம் மரணசாசனம் எழுத வேண்டும். இந்தியாவின் தற்போதைய சட்டத்தைத் தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு புதிய இயங்காற்றல் கொண்ட சட்டநெறியை மறுஉருவாக்கம் செய்யத்தூண்டும் துணிவு நமக்கு வேண்டும்.

இந்தியாவில் இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பிண்மை, மக்கள் நாயகம், குடியரசு என அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிக்கப்பட்டுள்ள உயரிய விழுமியங்கள் தமது உண்மைப்பொருளை இழந்து போலியாகிப் போனதை எண்ணி இந்த அமைப்பின் மீதே அவர் நம்பிக்கையிழந்து வருவதை அவரது மேற்கூறிய கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவில் நீதியும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் வெளிவரும் அவரது கட்டுரைகளின் இத்தொகுப்பு புதிய சிந்தனைகளுக்கான தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வெளியீட்டைக் கொண்டுவருவதற்கு தனது அன்பான இசைவினை வழங்கிய நீதியரசர் வி.ஆர் கிருஷ்ணய்யர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

வெளியீடு.

மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை

ஈரோடு, தமிழ்நாடு.

பேச 7373651155

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக