30/5/09

முசோலினியின் குளோனிங் - சோனியா


ஒருவருடைய பின்னணி என்ன என்று முழுமையாகத் தெரியாமலேயே ஒருவர்இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தலைவராக வளையவர முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி.
சோனியா காந்தியின் இயற்பெயர் என்ன என்பதே தில்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜெயலலிதா அவருக்கு எதிராகப் பொரிந்து தள்ளியபோதுதான் பலருக்கும் தெரிந்தது. 1946 டிசம்பர் 9-ம் தேதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோ-பௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?
அன்டோனியா மைனோ எனப்படும் சோனியா காந்தியின் தந்தை இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அவரது கருஞ்சட்டைப் படையில் முக்கியத் தளபதியாகவும் இருந்தவர் என்பது நாம் அறியாத ரகசியம். முசோலினியின் பாசிசக் கட்சி இரண்டாம் உலகப் போரில் அழிந்த பிறகு, ஒரு கட்டட ஒப்பந்ததாரராக தன்னை மாற்றிக் கொண்டு தனக்கும் பாசிசக் கட்சிக்கும் இடையில் உறவு இருந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார் அவர் என்பதும் யாரும் கவலைப்படாமல் விட்ட விஷயங்களில் ஒன்று.
1964-ல் கேம்ப்ரிட்ஜ் நகரத்தின் " பெல் கல்வி அறக்கட்டளை' நடத்தி வந்த பள்ளியில் ஆங்கிலம் படிக்க லண்டன் சென்ற அன்டோனியா மைனோ அங்கேயே ஓர் உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலையில் அமர்ந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜீவ் காந்தியும் நண்பர்களும் அடிக்கடி உணவருந்தச் செல்லும் உணவு விடுதி அது. அங்கேதான் கண்கள் கலந்தன; இருவரும் கருத்தொருமித்தனர்; காதலித்தனர். இதுவும் பலருக்கும் தெரியாத விஷயங்களில் ஒன்று.
அன்டோனியா மைனோவைத் தான் காதலிப்பதைத் தாய் இந்திரா காந்தியிடம் தெரிவித்தபோது, அவர் முதலில் தயங்கினார். இந்தியாவின் முதன்மைக் குடும்ப மருமகளாக ஓர் இத்தாலிப் பெண்ணா? என்கிற தயக்கம் தான் அது. இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியும் நடிகர் அமிதாப் பச்சனின் தாயாருமான தேஜி பச்சன் தான், ராஜீவின் காதலுக்காக இந்திராவிடம் போராடி அனுமதி பெற்றவர்.
அதுமட்டுமல்ல. அன்டோனியா மைனோ சோனியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு வருடம் தேஜி பச்சனுடன் அவரது வீட்டிலேயே தங்கினார். அங்கே, தேஜி பச்சன் அவருக்கு இந்தியப் பழக்கவழக்கங்கள், இந்தி பேச, நம் ஊர் சமையல் என்று எல்லா வகையிலும் பயிற்சி அளித்து நேரு குடும்பத்துக்கு மருமகளாகச் செல்லும் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதற்குப் பிறகுதான், 1968-ல் சோனியா - ராஜீவ் காந்தி திருமணம் நடந்து, அந்தத் தம்பதியர் இந்திரா காந்தி வாழ்ந்து வந்த சப்தர்ஜிங் சாலை வீட்டில் வலதுகால் எடுத்து வைத்து நுழைந்தனர். அரசியல் நாட்டமில்லாத ராஜீவ் காந்தி, தனது தம்பி சஞ்சய் காந்தியின் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்ததும், தாய் இந்திராவின் மரணத்துக்குப் பிறகு பிரதமரானதும், 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு பலியானதும் அனைவரும் அறிந்திருக்கும் விஷயம்.
கணவர் ராஜீவ் காந்தி முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு, 1983-ல் தான் சோனியா காந்தி இந்தியப் பிரஜையானார் என்பதும், இப்போதும் இத்தாலி - இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இரட்டைப் பிரஜையாகவும் தொடர்கிறார் என்பதும் நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரிந்திருக்காது.
சோனியா காந்தியைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளாத இன்னொரு விஷயம்கூட இருக்கிறது. மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேக்கும் பிறகு இந்தியாவின் பெருவாரியான கிராமங்களுக்கும், இடங்களுக்கும் சென்று இந்தியாவின் மூலை முடுக்குவரை தெரிந்து வைத்திருக்கும் நபர் அநேகமாக சோனியா காந்தியாகத்தான் இருக்கும். மாமியார் இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தியுடன் நிழலாக இவர் சுற்றியது போதாது என்று இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவியாகச் சுற்றி வருவதும் அதற்குக் காரணம்.
1998-ல் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியாகக் கூடாது என்று சரத் பவார் மற்றும் சங்மா போர்க்கொடி தூக்கியபோது, கண்கள் சிவக்க உதடு துடிக்கக் கோபமாக சோனியா காந்தி தில்லி அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளியேறியதும், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அவரைக் கதறி அழுதபடி பின்தொடர்ந்து சமாதானப்படுத்த முற்பட்டதும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும்.
அதேபோல, 1999-ல் ஜெயலலிதாவின் ஆதரவுடன் அன்றைய வாஜ்பாய் அரசை ஒரு வாக்கில் நம்பிக்கைத் தீர்மானத்தில் தோற்கடித்து, தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் நாராயணனிடம் பட்டியலுடன் போனதும், தான் அவருக்கு ஆதரவு தருவதாகச் சொல்லவில்லை என்று முலாயம்சிங் யாதவ் கூறி சோனியாவின் பிரதமர் கனவைக் குலைத்ததும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும்.
அன்றும் இன்றும் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றிய விஷயங்களையும் ரகசியமாகப் பாதுகாக்கும் சோனியா காந்தியின் பலம்தான் என்ன? எல்லா விஷயங்களிலும் குறைகளை மட்டுமே சுமக்கும், அன்னிய நாட்டினரான சோனியா காந்தியால் பெருவாரியான இந்தியர்களின் ஆதரவைப் பெற முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சியினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் அவர் பெற்றிருப்பது எதனால்?
சோனியா காந்தி நினைத்திருந்தால், ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு அரசியலில் இறங்கி இருக்கலாம். பிரதமராகக்கூட ஆகி இருக்கலாம். காங்கிரஸ் கட்சி பலமிழந்து, பலவீனமான எதிர்கட்சியாக இருந்த நிலையில்தான் அவர் கட்சி உருக்குலைந்து போகாமல் காப்பாற்ற பிரசாரத்துக்கு முன்வந்தார். கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸýக்குத் துணிந்து தமைமை ஏற்றார் என்பதுதான் அவர் அந்தக் கட்சிக்குச் செய்த மிகப்பெரிய உதவி. 1998-ல் சோனியா காந்தி தலைமை ஏற்றிருக்காவிட்டால், இன்று காங்கிரஸ் என்கிற கட்சியே இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி!
2004-ல் வலியப் போய் ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், கருணாநிதி, சரத்பவார் என்று நட்பு வலைவீசி ஓர் அணியை உருவாக்கிக் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைய வழிவகுத்த அதே சோனியா காந்தி, 2009-ல் மாநில அளவில் மட்டும் கூட்டணி என்று கூறி, தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறாரே, அது எந்த தைரியத்தில்? மன்மோகன் சிங்கின் ஐந்தாண்டு ஆட்சியின் சாதனையை நம்பியா, இல்லை நேரு குடும்பக் கவர்ச்சி ராகுல் காந்தியின் வளர்ச்சியால் அதிகரித்திருக்கிறது என்று நினைப்பதாலா?
சோனியா ஒரு புதிர் என்பது உண்மை. ஆனால் தவிர்க்க முடியாத புதிர்! மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிகள் சோனியாவை விமர்சிப்பதில்லை, கவனித்தீர்களா? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம்!


நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக