7/2/13

பயன்மரம் சாய்ந்தது





களச் சாவில் வீழ்ந்திருக்க வேண்டும் நீயோ
கயவர்களால் வீழ்ந்தாயே தோழா ! இந்த
உளக் காயம் என்நெஞ்சை உலுக்கு தேடா
ஓருயிர்க்கும் ஒருதீங்கும் அறியா யேடா
சளைக்காமல் சுழன்றவன் நீ்; தமிழ்மா வீரன்
தமிழ்ப் பகையை வேர்அறுக்க விரைந்த தீரன்
ஒளிக்காமல் யாவையுமே பிறர்க்கே ஈந்த
ஒளிச்சுடர்நீ; விளக்காகப் போய்விட் டாயா?

உதவிஎன யார்வரினும் உதவி செய்வாய்
உள்ளத்தால் எவர்மீதும் அன்பைப் பெய்வாய்
பதவி, பட்டம் என்றே எதையும் நாடாய்
பரப்புரையா, களப்பணியா விழிகள் மூடாய்
விதம்விதமாய் அமைப்புபல இங்கே உண்டு
வேற்றுமைகள் கண்டதில்லை உனது தொண்டு
எதிலேயும் எப்போதும்; முந்திக் கொண்டு
இயங்கிக் கொண்டே இருப்பாய்; இனியார் உண்டு?

ஈரோட்டின் இனமானச் சிங்கம்; கொள்கை
இருப்பினிலே மாசுமரு இல்லாத் தங்கம்
போராட்டம் எதுவரினும் முன்னே நிற்பாய்
புதுமைகளை மாணாக்கன் போலக் கற்பாய்
நீரோட்டம் போல் ஓடி எங்கும் செல்வாய்
நினைத்த செய லில் நினைத்த வாறே வெல்வாய்
யார்போட்ட சதிவலையோ சாய்ந்து விட்டாய்
வேர்காழ்த்த பயன்மரமே! வீழ்ந்து விட்டாய்

வினையாண்மை மிக்கோனே! மோகன் ராசே!
வீதிகளில் மேடைகளில் தொழிலா ளர்தம்
பணி யாண்மைச் செயல்களிலே உனது வாழ்வைப்
பனிபோலக் கரைத்தாயே! உன்னைப் போலே
தனியாண்மை கொண்டதொரு தமிழக் காளை
தனையென்று காண்போமோ? நீ எடுத்த
பணிதன்னை முடித்திடுவோம் ! தமிழ்த்தேசத்தைப்
படைக்கின்ற வரை நாங்கள் ஓய மாட்டோம்!
                              -       பாவலர் தமிழேந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக