1/7/09

இந்திய பார்ப்பனிய முகம் கிழித்த இராவணன் - புலவர் குழந்தை


இந்தியம் என்கிற ஒரு பாசிச அமைப்புக்கு ”இராமாயணம்” எனும் ஒரு புனைவுக் காவியமே உயிர் ஆதாயமாக உள்ளது. ”இந்தியா” இது இராமனின் பூமி என்றுக் கூறி வர்ணாசிரமக் கருத்துக்களை வலியுருத்தி வரும் ”இந்து” அடிப்படை நூல் இராமயணம். இந்தியா எனும் தேசிய இனங்களின் சிறைக்கூடத்தை தகர்க்க வேண்டுமானால் முதலில் ”இந்து” எனும் மதவியல் கோட்பாட்டை தகர்க்க வேண்டும். இந்து மதவெறியை மாய்க்க வேண்டுமானால் இராமயணம் போன்ற புணைவுக் கதைகளைப் புறந்தள்ளி நம் மண்ணின் மரபுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியத் தேசியம் எனும் பொய்மையை வீழ்த்தி தமிழ்த் தேசியம் எனும் நம் மெய்மையை மீட்க முடியும்.

இதன் வழிப்பட்ட ஒரு வேலைத் திட்டமே இராவண காவியம். இதை எழுதியவர் புலவர் குழந்தை அவரது பிறந்த நாளான இன்று அவரது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க சில துளிகள்....

இராவணன் காலத்தே விந்தமுதல் வாழ்ந்து வந்த தமிழ் குடிமக்கள், தமிழ்ப் பேரரசுகள், சிற்றரரசுகள் தண்டமிழ்ப் பெண்டிர்கள் ஆகிய எல்லாரையுமே ஆரிய அடிமையாக்கிய கம்பரால், தமிழ் மக்கள் வாயினால் உச்சரிக்கவே முடியாத அத்தகு இழித் தன்மையாகப் பழித்துக் கூறியிருக்கும் பழிப்புரையைப் போக்கி, இராவணன் முதலியோரின் பெருமையையும், அக்காலத் தமிழ் மக்களின் சிறப்பினையும் திறன்பட எடுத்துக்காட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் வரலாறு இடையறாது தொடர்ந்து நடைபெறுதற் பொருட்டே இராவண காலியம் செய்யப்பட்டது.

குடி, கொலைவேள்வி போன்ற ஆரியர் செயலை, ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்த பொன்னன் (இரணியன்), பொற்கண்ணன் (இரணியாக்கன்), சூரன், மாவலி (மகாபலி), மாந்தரன் (நரகாசுரன்), சம்பரன் முதலிய தமிழர்த் தலைவர்களை வஞ்சித்துக் கொன்றதோடு, அவர்களை அசுரர்களெனத் (அரக்கர்) தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்தி வெறுக்கும் படி செய்த பித்தலாட்டத்தை வெளிப்படுத்தவே இராவண காவியம் செய்யப்பட்டது.

பெயரைக் கேட்கினும் ஆரியர் அஞ்சி நடுங்கிய ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை, இமயத்தையுங் கடந்து சென்ற கரிகாலன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. தமிழ்நாட்டில், தமிழர்களால் ஆனால், கம்பராமாயத்தால் ஏற்பட்ட ஆரியமோகத்தால், ஆரியராமன் பிறந்தநாளை “ராமநவமி” எனக் கொண்டாடி வருகின்றனர் நற்றமிழ் மக்கள். அந்த ராமநவமி நாளில் – ராமலீலாக் கொண்டாண்டத்தில் தமிழர் மாபெருந்தலைவனான இராவணன் உருவத்தைத் தீயெட்டிக்கும் வடவர் கொடுஞ்செயலைக் கெண்டு மகிழும் தமிழர்களின் அறியாமைப் போக்கவே இராவணகாவியஞ் செய்யப்பட்டது.

தமிழர் பண்பாட்டைப் போக்கித் தமிழ் மக்களை ஆரிய நாகரியத்திற்கு அடிடையாக்கி, ஆரிய ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்து, ஆரியர் உயர்மக்களாகவும், தமிழர் தாழ்மக்களாகவும் வாழும்படி செய்த வடவாரிய இராமன் பிறந்தநாளை இவ்வளவு நாளாய்க் கொண்டாடி வந்த இழிவின் கழுவாயக ஆண்டுதோறும் ஆடி முதற்கிழமையில் இராவணன் திருநாள் கொண்டாடவும், இராவணன் பெருமையைத் தமிழ் மக்கள் அறியும்படி செய்யவும், பழையபடி தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கும்படி செய்யவுமே இராவணக் காவியஞ் செய்யப்பட்டது.

இராவண காவியம் என்னும் ஒப்பிலாத தனித்தமிழ்ப் பெருங்காவியத்தை இயற்றித் தமிழ்மக்களிடையே புத்துணர்ச்சியினையும், இனவெழுச்சியினையும், தன்மானப் பண்பினையும் கிளர்ந்தெழச் செய்த புலவர் குழந்தை அவர்களின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பழையக் கோட்டை வழியில், ஈரோட்டிற்குத் தெற்கே பதினாறாவது கல்லில் (26கி.மீ) “ஓலவலசுப் பண்ணையக்காரர்” என்னும் பழம் பெருங்குடியில், 1.7.1906 இல் இவர் பிறந்தார். இவர் தம் பெற்றோர் முத்துசாமி -சின்னம்மாவுக்கு ஓரே பிள்ளை.

நான்கைந்து திண்ணைப் பள்ளியில் நான்கைந்தாண்டுகள் இடையிடையே விட்டுவிட்டுப் படித்த இவர்தம் பள்ளிப் படிப்புக் காலம் ஆகக்கூடி எட்டு மாதங்களேயாம். இவர் பத்தாண்டுப் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலை இயற்கையாகப் பெற்றிருந்தார். அவ்வியம் பருவத்திலேயே, ஒரு பாட்டைப் பிறர் பாடக் கேட்டால் உடனே இவர் அப் பாட்டின் ஓசையில் புதுப் பாட்டை எழுதிக்கொண்டிருப்பதே இவருடைய பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் இருந்தது.

இவர் முதன் முதலாகப் படியவை இசைப்பாடல்களேயாம். இவர்தம் கல்லாக் கவிதிறத்தையும், கவிகளின் சிறப்பிளையும் கண்டு வியந்த அறிஞர் பெருமக்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டி இவரை ஊக்குவித்தனர். அக்காலத்தில் ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர் எவருமின்மையால், இவர் ஆசிரியர் உதவின்றித் தாமாகவே முயன்று படித்துத் தமிழில் சிறந்த புலமையுடையவரானார். மேலும் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகப் பலவர் பட்டம் பெற்றுச் சிறந்தார்.

இவர் 1924 முதல் 1962 முடிய 39 ஆண்டுக் காலம் ஆசிரியத் தொண்டாற்றியுள்ளார். 1941 முதல் 1962 முடிய பவானி கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

1935 முதலாக இவர் பள்ளிப் பாட நூல்கள் எழுதிவந்துள்ளார். இவர் எழுதிய பள்ளி இலக்கண நூல்கள் (3-11 வகுப்பு) தனிச் சிறப்புடையவை.

இவர் இதுகாறும் எழுதியுள்ள நூல்களாவன

செய்யுள் நூல்கள்
1.இராவண காவியம், 2.அரசியலரங்கம், 3.நெருஞ்சிப்பழம், 4.காமஞ்சரி, 5.உலகப் பெரியோன் கென்னடி, 6.திருநணாச் சிலேடை வெண்பா, 7.புலவர் குழந்தை பாடல்.

உரை நூல்கள்
1.திருக்குறள்-குழந்தையுரை, 2.தொல்காப்பியப் பொருளதிகாரம் – குழந்தையுரை, 3.நீதிக்களஞ்சியம் உரை.

இலக்கண நூல்கள்
1.யாப்பதிகாரம், 2.தொடையதிகாரம், 3.இன்னூல் (சூத்திரம்)

உரைநடை நூல்கள்
1.தொல்காப்பியர் காலத் தமிழர்கள், 2.திருக்குறளும் பரிமேழலகரும், 3.பூவாமுல்லை, (இம் மூன்றும் ஆராய்ச்சி நூல்கள்) 4.கொங்கு நாடு, 5.தமிழக வரலாறு, 6.தமிழ் வாழ்க, (நாடகம்) 7.தீரன் சின்னமலை, (விடுதலை வீரன் வரலாறு) 8.கொங்கு நாடும் தமிழும், 9.கொங்குக் குலமணிகள், 10.அருந்தமிழ் விருந்து, 11.ஒன்றே குலம், 12.அண்ணல் காந்தி, 13.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், 14.தீரன் சின்னமலை நாடகம் (இன்னும் அச்சாகவில்லை)

1925-இல் தந்தைப் பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கியதும் இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்து, பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் எனலாம்.

இவர் சமய நம்பிக்கை இல்லாதவர், வெள்ளக்கோவில் தீத்தாம்பாளையத்தில், 1930-இல் “ஞானசூரியன்” ஆசிரியரான சாமி சிவானந்த சரசுவதி என்பாருடன், “கடவுள் இல்லை” என நான்கு நாள் நடத்திய சொற்போரில் இவர் வாகை சூடினார்.

1938-இலும், 1948-இலும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குகொண்டு, பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும் பெருந்தொண்டாற்றினார். இந்தி ஆட்சி மொழியானால் தமிழுக்கும் தமிழருக்கும் உண்டாகும் கேட்டினை விளக்கி, “இந்தி ஆட்சி மொழி ஆனால்” என்னும் ஆராய்ச்சி நூலினை எழுதி அச்சிட்டு, 1695-இல் கோவையில் நடந்த காங்கிரசு மாநாட்டில் வழங்கினார். “அரசியலரங்கம்” என்னும் நூலில், “ஆட்சி மொழி” என்னும் தலைப்பில், இந்தி தேவையில்லை என்பதை முடிவு கட்டியுள்ளார்.

“தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இயக்கத்தின் போது, “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற அச்சுக் கட்டைகள் செய்து கொடுத்து, ஒரு துணி வணிகரைக் கொண்டு வேட்டி, துண்டு, சேலைக் கரைகளில் அச்சிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமை இவரையே சாரும்.

பகத்சிங்கு முதலிய விடுதலை வீரர்கள் கொள்கையில் இவர் மிகுந்த பற்றுடையவராய் இருந்தார். 1931-இல் ஆங்கில ஆட்சியாளர் அவர்களைத் தூக்கிக் கொன்றபோது, இவர் உணர்ச்சி மிக்க பாடல்கள் பாடி வருந்தினார்.(அப் பாடல்கள் “புலவர் குழந்தைப் பாடல்” என்னும் நூலில் உள்ளன.)

புலவர் குழந்தை அவர்கள் தம் தாய்மொழியிடத்துக் கொண்டுள்ள அளவுகடந்த பற்றுக்கும், தமிழ்மொழி யாதொரு குறைபாடுமின்றி வளமுற்றுத் திகழ வேண்டும் என்னும் பேரார்வத்திற்கும் பெரும் நோக்கிற்கும் சான்றாக திகழ்கிறது. “தமிழெழுத்துச் சீர்திருத்தம்” என்னும் ஆராய்ச்சி நூல். “தொல்காப்பியர் காலத் தமிழர்”, “பூவாமுல்லை”, “திருக்குறளும் பரிமேழலகரும்” என்னும் நூல்கள் புலவரின் ஆராய்ச்சித் திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

காங்கிரசு ஆட்சியாளரால் தடை செய்யப்பட்ட இவர்தம் “இராவண காவியம்” தமிழக அரசினால் 17.05.1971-இல் தடை நீக்கப்பட்டது.

தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்பன இவர்தம் முந்நாடியாகும். தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ் மரபுக்கு ஒவ்வாதவற்றை – தகாதவற்றை – வன்மையாக கண்டிப்பதிலும், தக்கவற்றை ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூறுவதிலும் இவர் மிக்க நெஞசுரம் உடையவர். எதையும் இனிய சொற்களால் வெளிப்படையாக எடுத்துரைக்கும் இயல்புடையவர்.

புலவர் குழந்தை, 1972ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் இயற்கையில் ஓய்வெடுத்துக்கொண்டார்.

1 கருத்து:

  1. வாழ்க வளர்க!.

    தமிழன் என்றாலும் ராவணன் சிவபக்தன். அதைப் பற்றி கூறவே இல்லை. தமிழனாய் பிறந்தமைக்காக அவர்கள் அவனை அரக்கனாக்கினார்கல். நீங்கள் அவன் பக்தியை மறைக்கின்றீர்Kளோ!.

    பாவமய்யா ராவணன்.

    பதிலளிநீக்கு