30/6/09

புதுமைப்பித்தன் எனும் படைப்பாளுமையை நினைவு கூர்வோம்


புதுமைப்பித்தன் என அழைக்கப்படும் சொ.விருத்தாசலம் 1906ஆம் ஆண்டு கடலூருக்கு அருகாமையிலுள்ள திருப்பாதிரி புலியூரில் பிறந்தார்.

இது புதுமைப் பித்தனின் நூற்றாண்டு (1909-2009)

இன்று அவரது நினைவு நாள். 1930-களிலேயே படிப்பை முடித்து விட்டு பத்திரிக்கை ஆசிரியராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றியவர். முழுநேர எழுத்தாளராக தன்னை நிறுவிக் கொண்டவர் புதுமைப் பித்தன் என்கிற விருத்தாச்சலம்.

படைப்பாளிகள் பொதுவாக எதிர்கொள்ளும் விமர்சனக் கணைகள் புதுமைப் பித்தனையும் விட்டு வைக்கவில்லை. என்றாலும், அன்றும் இன்றும் எழுத்தாளர்களாலும் இலக்கிய வாசகர்களாலும் பேசப்படும் கருப்பொருளாக அவர் இருக்கிறார். தொடக்க எழுத்தாளர்களும் வாசகர்களும் முதலில் படித்துவிட வேண்டுமென்று ஆவல் கொள்ளும் படைப்பாளுமையாக தமிழிலக்கிய உலகில் இன்றும் வாழ்கிறார்.
நூற்றாண்டின் அருகாமையில்தான் அவரது பெரும்பாலான எழுத்துப் தொகுதிகள் புதிய பொழிவுடன் வரத்தொடங்கியுள்ளது. புதுமைப் பித்தனின் படைப்புலகம் விரிவான தளங்களையும், பன்முகத்தன்மையும் கொண்டவை. ஆயினும் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது அடித்தட்டு, கீழ் மத்தியத்தர பிரிவு மனிதர்களின் வாழ்க்கை முயற்சிகளும், உளப்பதிவுகளும், சமூகப் பார்வையும் தான்.

தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கில், உலகளவிளான சமூக மாற்றங்களும் வாழ்க்கைத் தேற்றங்களுக்கும் ஏற்ப உருவான பல்வேறு இலக்கியப் போக்குகளையும், வடிவங்களையும் புதுமைப் பித்தன் தனது சிறுகதைகளில் கையாண்டுள்ளார். எதார்த்தவாதம், மாயாஎதார்த்தவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம், கட்டுடைப்பு முயற்சிகள் என்று பல்வேறு போக்குகள் அழுத்தமாக காலூன்றுவதற்கு முன்னதாகவே அவைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்றவர் புதுமைப் பித்தன். சாப விமோசனம் “கபாடபுரம்” “பிரம்மராட்சஸ்” போன்றவை அவற்றுள் சில. குறிப்பாக பரவலான வாசகத் தளங்களில் விவாதிக்கப்படும் அவரது படைப்புகளில் சிற்பியின் நரகம், கையிற்றரவு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், காஞ்சணை, ஒரு நாள் கழிந்தது போன்ற இன்னும் பல சிறுகதைகள் அவரது எழுத்துகள் பன்முகப் படைப்பாற்றலை பறைசாட்டுபவையாகும். இட்லர், ஸ்டாலின் பற்றிய புதுமைப் பித்தனின் மதிப்பீட்டு விமர்சனக் கட்டுரைகளும், அவரது சமூகப் பார்வைக்குச் சான்றாகும்.
மரபுகள் புராணப் புரட்டுகளில் நியாயப்படுத்தப்படும் ஆணாதிக்க கடவுளிய அராஜகத்தை சாப விமோசனத்தில் தோலுரிக்கும் புதுமைப் பித்தன் கடவுளேயானாலும் குற்றம் செய்யும்போது சராசரி மனிதனைக் காட்டிலும் இழிவானவனே என்று இடித்துரைக்கிறார். இது புதுமைப் பித்தனின் கட்டுடைப்பின் ஒரு அடையாளம் மட்டுமல்ல கற்பெனும் மாய வலையில் பெண்மையை உளவியல், வாழ்வியல் ரீதியாக கட்டி வைத்திருக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரான சாடல்.

தமிழ் இலக்கியத்தில் பேய்க் கதை மன்னர்கள் வசீகரமாக வளம் வருவதற்கு முன்பே (மேதாவி,பி.டி.சாமி, இன்றைய இந்திரா சவுந்தரராசன் போன்றவர்கள்) மனித மனங்களில் அடியாழத்தில் காலங்காலமாக பதிந்து கிடக்கும் பேய், ஆவி பற்றிய அருவ பயத்தை நுட்பமாக சித்தரித்து காஞசணையை உருவாக்கனார். புதுமைப் பித்தனின் படைப்புத் தளத்தில் பொருந்தாத ஒன்றாக இக்கதை பேசப்பட்டது. புதுமைப் பித்தன் நாவல் எழுதவில்லை அதற்கான காரணம் அறியப்பட வேண்டிய ஒன்று. கடினமானவர் என்று சக எழுத்தாளர்களால் பேசப்பட்ட புதுமைப் பித்தன் கனமான வாழ்வியல் செய்திகளைக் கூட நையாண்டியாகவும், நெகிழ்வாகவும் எழுதும் வல்லமை பெற்றிருந்தார்.
ஒரு படைப்பாளி என்கிற அளவில் தனது எழுத்தாற்றல் மீதும் படைப்பாளுமை மீதம் தன் மீதும் அளவு கடந்த தன்னம்பிக்கையும், கர்வமும் கொண்ட கலைஞனாக புதுமைப் பித்தன் வாழ்ந்திருக்கிறார். அதனால் தானோ பொருளியல் ரீதியாக அவர் எதையும் சம்பாதித்து விடவில்லை. கடைசி வரை எளிமை, பற்றாக்குறை, வறுமையினூடாகவே வாழ்ந்து 1948-ஆம் ஆண்டு சூன் 30 அன்று மறைந்தார்.
புதுமைப் பித்தன் என்கிற ஒரு எழுத்தாளனின் ஆளுமையை நினைவு கூர்வதோடு அவரது படைப்புகளை விரிவாக மறுவாசிப்புக்கு உட்படுத்துவதன் வழியாக அவரது நூற்றாண்டு நிறைவில் நிறையப் பேசலாம். - கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக