13/6/09

சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?

சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”





உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே - சே



அர்ஜென்டினா நாட்டின் மண்ணின் மைந்தனாக பிறந்து சே உலக நாடுகளுன் விடுதலைக்காக தோள் கொடுக்கப் பயணப்பட்ட புரட்சியாளர்.

மெக்சிகோவில் பிடல்காஸ்ட்ரோவை சந்தித்து கியூப நாட்டின் விடுதலைப் போருக்கு தன்னையும் அர்பணித்துக் கொண்டு 1956ல் 81 பேருடன் மெக்சிகோவிலிருந்து கியூபாவுக்கு புறப்பட்டவர் சே.


சே வின் மிகச்சிறந்த கொரில்லா தாக்குதல் திறனே பிடல்காஸ்ட்ரோவுக்கு ஊக்கமளித்து கியூப விடுதலை போரில் பெறும் பங்காற்றியது. 1958 ல் சே தலைமையிலான படைக்குழு சாந்தாகிளாரா நகரை கைப்பற்றி பிடல்காஸ்ட்ரோவுக்கு முதல் வெற்றியை ஈட்டித் தந்தது. 1976 ல் கியூபாவின் அதிபராக பிடல்காஸ்ட்ரோ பொறுப்பேற்க சேயின் கரமே முழு உதவியாற்றியது. அதற்கு பின் கியூப நாட்டின் பல வளர்ச்சிகளுக்கு, உலகின் பல பகுதிகளுக்கு பயணப்பட்டு தொண்டாற்றியவர் சே.

கியூப விடுதலை, முன்னேற்றம் இவைகளோடு நிறைவடையாத சே இன்னும் பல நாடுகளின் அடிமை நிலைக்கு எதிராக களம் காண வேண்டும் என தீர்மானித்து கியூபாவிலிருந்து வெளியேறி பொலிவிய காடுகளில் போராடி மாண்டார்.
.
1976 ல் உலகின் எந்த மூலையில் மனித சமூகத்தின் மீது ஏகாதிபத்தியங்களின் தாக்குதல் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வோம் என அறிவித்த பிடல்காஸ்ட்ரோவின் கியூபா இன்று ஈழப் பேரழிவிற்கு துணையாக உலக நாடுகள் அவையில் வாக்களித்திருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது.

நமது நோக்குநிலை சற்றேமாறினாலும் கோணப்பரிணாமங்களும் மாற்றமடைகின்றன என்பது சார்பியல் தத்துவம்.


அதுபோலவே

தற்போது கியூப அரசின் நோக்கு நிலையும் மாறியுள்ளதா என்பதே நம்மிடமுள்ள கேள்வி? இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற முதலாளித்துவ நாடுகளின் நோக்கங்கள் ஈழத்திற்கு எதிரானது என்பது இயல்பு. ஆனால், உலகின் கம்யூனிச நாடாக நாமெல்லாம் முன்மாதிரியாக சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கியூபா இன்று இப்படி மாறிப்போனதன் காரணமென்ன?.

கியூபாவின் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் பொறுப்பாளராக பிடல்காஸ்ட்ரோ இல்லாததா?

பிடல்காஸ்ட்ரோவும் அவரது பொலிட் பீரோக்களும் மார்க்சியப் பார்வையை வெறும் கியூப தேசத்துடன் மட்டுமே சுருக்கிக் கொண்டனரா?

சோவியத் நாடுகளிலிருந்த ரசியாவிற்கு அடுத்த சீனாவும் முதலாளிய வர்த்தக சூறாவளிக் காற்றுகளாய் மாறி உலக நாடுகளை நோக்கி சுழன்று அடிப்பதை தனக்குமான முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள கியூபாவும் முடிவு செய்து விட்டதா?

எப்படி இருப்பினும் சே போன்ற உலக மனித உரிமைப் போராளிகளால் கட்டமைக்கப்பட்ட கியூபா இன்று தடம்மாறிப் போவது வேதனையடையக் கூடிய விடயமே.

அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற வேறும் ஒற்றைக்கண் பார்வையை மட்டுமே வைத்துக் கொண்டு தேசிய விடுதலைப் போராட்டமான ஈழ ஆக்கிரமைப்புப் போரை நடத்தி இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்த இனவெறி சிங்கள அரசுக்கு ஆதரவாக இன்று சே இருந்திருந்தால் ஐ.நா.அவையில் கியூபா வாக்களித்திருக்குமா?


சே இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் போரில் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் களத்தில் தோளோடு தோளாக நிச்சயம் நின்றிருப்பார். ஆனால் கியூப விடுதலைக்குப் போராடிய அந்த சே எனும் மாபெரும் மனிதனின் முதுகில் குத்துவதைப்போல் தற்பொழுது கியூப அரசு மனிதப் படுகொலைக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளது வெட்கக் கேடானது.

தன் மக்கள், தன்பெண்டு, தன்பிள்ளை, தன்நாடு என்று சுருங்கிப்போன பார்வையின் தன்னல முடிவே கியூபாவின் தமிழீழ நிலைப்பாடு.

தமிழீழத்தில் மொழி, இனம், தேசியம் குறித்த பார்வைகள் கியூபாவின் தற்போதைய அதிபரான இராவுல்காஸ்ட்ரோவிற்கு தெரியாமல் போய்விட்டதா? அப்படி முழுமையாக தெரியாவிட்டால் ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அறியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறுவதே மார்க்சியத்திற்கு எதிரானது தானே!

எப்படியோ போகட்டும்!

நாங்கள் மட்டும் தளரப்போவதில்லை.

எவரை எரிப்பினும் ஒருபிடி சாம்பல்!

எத்தனை கொம்பனும் வந்தவழி ஒன்றே!

உரிமையை மீறிய ஒருவளம் இல்லை!

உரிமைக்கு அடிப்படை உயிர்ப் போராட்டம்!
என்பதை நெஞ்சிலேந்தி சேகுவேராவின் இந்த பிறந்த நாளில் சூளுரைக்கிறோம்.

உலகே எதிர்ப்பினும் உரிமை மீட்போம்!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக