10/6/09

11.06.2009பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாளில்தமிழர்கள் விடுதலைக்காய் சூளுரைப்போம்!



”கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!”

சாதி அழுக்கு, மத அழுக்கு, பொருள் ஆளுமை அழுக்கு, அறிவாளுமை அழுக்கு, வினை ஆளுமை அழுக்கு இப்படிப்பட்ட குமுக அழுக்குகளால் விழைகிற உணர்ச்சிகளுக்கு மாந்தன் ஆட்படாமல் தனிநிலையில் தப்பித்து விட இயலாது.

இப்படிப்பட்ட அழுக்குகளை ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலேயே ஒருவரின் வாழ்க்கை பொருளுடைய தாகின்றது.

அந்தப் பொருளுடைய வாழ்க்கை குமுக உறவுகளோடு உறவு கொண்டு குமுக அழுக்குகளை நெருட்டுகிற சூழலில் பொருளுடைய அவரின் வாழ்க்கை வரலாற்றுக் குரியதாக மாறுகிறது.

அப்படிப்பட்டவர்களே வரலாற்றுக் குரியவர்களாக வரலாற்று மாந்தர்களாக நிற்க இயலும்.

குமுக அழுக்குகளை அக, புற நிலைகளில் நீக்குவதற்கான நிகழ்ச்சிகள் என்பவை ஆழ்ந்த பொருளுடையவை.

அதுவும், இத் தமிழ்ப் பேரினக் குமுகத்தின் மீது படிந்திருக்கிற சொல்லி மாளாதவை.

எவர் எவர்க்கெல்லாம், எவ்வெவற்றுக்கெல்லாம் இத் தமிழகம் அடிமைபட்டுக் கிடக்கின்றதோ அவற்றின் அழுக்குகளெல்லாம் இப் பேரினத்தை முடை நாற்றத்திற் குட்படுத்தி வைத்திருக்கிறது.

சாதிப் புழுக்கள் நெளிந்திடும் சாணித் திரளைகள் நாம் என்றும், இந்து மதம் எனும் இழி மதம் ஒழிக என்று நம் இழிநிலைகளைச் சாடியதோடு ஆரியத்திற்குப் பாய் விரித்ததை எதிர்த்தும் ஆங்கிலத்திற்கு கற்பிழந்ததைக் கண்டித்தும் இம் மண்ணின் இழி அழுக்குகளைத் தம் தீ எழுத்துக்களாலும் செயலாலும் பொசுக்க எழுந்த வரலாறே பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் அவர்களின் வரலாறு.

பாவலரேறு அவர்களின் வரலாறு எழுத்தின் வரலாறாக மட்டுமன்று. செயலின் வரலாறாகவும் இருந்தது.
அவரின் எழுத்தும் செயலும் மாறுபாடுடையதன்று

தூய தமிழ் முயற்சிகள் எழுத்தளவிலும், மொழி அளவிலோடும் நின்றிருந்ததை, செயலியக்கம் வழியும், மொழி நிலை தாண்டி இன நாட்டு நலம் நோக்கியும் செயற்படுத்தியது தென்மொழியே.

தென்மொழியின் பணி இதழ்ப் பணியாக மட்டும் நில்லாமல் இயக்கப் பணியாகவும் விரிந்திருந்தது.

தூய தமிழியக்கத்திற்குத் தென்மொழியின் பணியே பேரியக்கமாய், பெரு மக்களிக்கயமாய் நடந்தது.

தென்மொழியின் ஆசிரியராகவும், தூய தமிழியக்கத்தின் முதற் படைஞராகவும் நின்று போரிட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே.

பாவலரேறு ஐயா அவர்களின் வாழ்க்கை, தமிழ்த்தேச எழுச்சியின் வாழ்க்கை.
அவரின் வரலாறு தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறு.

”எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!”
- பாவலரேறு.

10.03.1933
சேலத்தில் இரா. துரைசாமி ஐயா – குஞ்சம்மாள் அம்மையார் அவர்களின் முதல் மகனாகப் பிறந்தார்.
9ஆம் அகவை (வயது) யில்
”குழந்தை” எனும் கையெழுத்து இதழை தாமே இதழ் ஆசிரியராக இருந்து நடத்தினார். அதனால் பள்ளிக்கூடங்களில் ”குழந்தை ஆசிரியர்” என்றே அழைக்கப்பெற்றார்
13ஆம் அகவையில்
8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ”தூவல் (பேனா) வன்மையா? நா வன்மையா?” என்று திருச்சி வானொலி நடத்திய பட்டிமன்றத்தில் ”தூவலே வன்மையானது” என்று பேசி பரிசு பெற்றார்.
”மல்லிகை” எனும் தனது முதல் பாவியத்தை எழுதினார். தொடர்ந்து பூக்காரி எனும் பாவியம் எழுதி பின்னாளில் ”கொய்யாக்கனி” எனும் பெயரில் வெளியிட்டார்.
25.04.1951 ஆம் ஆண்டு
தாமரை அம்மையாரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார்.
01.08.1959 ஆம் ஆண்டு
”தென்மொழி” இதழைத் தொடங்கினார். இதழின் பெயர் மொழி ஞாயிறு பாவாணர் அவர்களால் சுட்டப்பெற்றது.

26.01.1965 ஆம் ஆண்டு
இந்தி வல்லாண்மையை எதிர்த்து கடுமையான துண்டறிக்கை தென்மொழி சார்பில் இலக்கக் (இலட்சம்) கணக்கில் அச்சிட்டு பரப்பப்பெற்றது.
17.11.1965 ஆம் ஆண்டுஇந்தி எதிர்ப்புப் போரில் அன்றைய முதல்அமைச்சர் பக்தவச்சலத்தை கடுமையாகக் கண்டித்து ஆசிரியவுரை எழுதினார். இதற்காக அரசு வழக்குப் பதிவு செய்து இவருக்கு 200 உருபாய் தண்டம் அல்லது நான்கு மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தது. ஐயா தொகை கட்ட மறுத்ததால் வேலூர் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஐயாவின் அஞ்சல் துறைப்பணி பறிக்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு
தென்மொழியில் ”தமிழக விடுதலை இயக்கம்” விரைவில் தொடங்கப்பெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

1967 ஆம் ஆண்டு
”தமிழக விடுதலைப் படை” விரைவில் அமைக்கப் பெற இருப்பதாகவும் அதில் உடனே உறுப்பனர் ஆகிக் கொள்ளுங்கள் எனும் அழைப்பை தென்மொழியில் விடுத்தார்.
07.11.1969 ஆம் ஆண்டு
தமிழக விடுதலைப் படைக்கான அமைப்புக் கூட்டம் திருக்கோயிலூரில் நடத்தப்பெற்றது. 96 பேருக்கு அழைப்பு விடுக்கப்பெற்று அதில் 34 பேர் வந்திருந்தனர். வந்தவர்கள் குருதிக் கையொப்பமிட்டு தமிழக விடுதலைக்கென முன்னின்று செயல்படுவோம் என உறுதியுற்றனர்.
10,11.06.1972 ஆம் ஆண்டு
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக விடுதலை மாநாடு திருச்சி – தேவர் மன்றத்தில் ஐயா அவர்கள் அமைப்பாளராக இருந்து நடத்தினார். மாநாட்டினையொட்டி மாபெரும் பேரணி தமிழக விடுதலைக்கான முழக்கங்களுடன் நடத்தப்பெற்றது.

09.06.1973ஆம் ஆண்டு
தமிழக விடுதலை இரண்டாம் மாநாடு மதுரை இரீகல் திரையரங்கில் ஐயா தலைமையில் ஏற்பாடு செய்யாப்பட்டது. முன்னதாக கட்டமொம்மன் சிலையிருந்து பேரணி புறப்பட்டபோது காவல் துறையால் தளைப்படுத்தப் பட்டனர்.
13.07.1975 ஆண்டு
தமிழக விடுதலை மூன்றாம் மாநாடு சென்னை கடற்கரையில் ஐயா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் முந்தைய நாளே ஐயா உள்ளிட்ட 22 பேர் சிறைப் படுத்தப்பட்டனர். 56 நாட்கள் கழித்து பிணையலில் விடுதலை செய்யப்பட்டனர்.
05.02.1976 ஆம் ஆண்டு
இந்திராகாந்தியின் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கை (மிசா) கொடுஞ் சட்டத்தின் கீழ் ஐயா சிறைபடுத்தப்பட்டார்.

19.05.1978 ஆம் ஆண்டு
இலங்கைக்குச் சென்று இன விடுதலை குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.

27.08.1978ஆம் ஆண்டு
தமிழீழ விடுதலைப் போராளிகள் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த பொழுதிலிருந்து அவர்களுக்கு ஐயா மிகு துணையாக இருந்து வெளிப்படையாக ஆதரவு தந்தார்.

18.04.1981ஆம் ஆண்டு
அந்தமான் தீவுக்கு முதன்முறையாக கப்பலில் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
12.05.1981ஆம் ஆண்டு
”மனுநூல் எரிப்புப் போராட்டத்தில்” கலந்து கொண்டு தளைப்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

7,8.11.1981ஆம் ஆண்டு
”உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்” தொடக்க மாநாடு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழீழப் போராளிகளும், ஐயா அமிர்தலிங்கமும் கலந்து கொண்டனர்.
06.08.1982ஆம் ஆண்டு
விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், திரு. உமா மகேசுவரன் உள்ளிட்ட ஐவர் தமிழகத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிணையலில் வெளிவந்தபோது பாவலரேறு தனது குடும்பத்திருடன் நேரில் சென்று வரவேற்றார்.
04.08.1983ஆம் ஆண்டு
தென்மொழி அலுவலகத்திற்குள் புலனாய்வுக் காவல் துறையினர் புகுந்து தமிழீழம் தொடர்பாக வெளியாகவிருந்த தமிழ்நிலம் இதழ்களையும் அச்சு எழுத்துக்களையும் பறிமுதல் செய்ததோடு ஐயா மீதும் பொழிலன் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

10.09.1983ஆம் ஆண்டு
ஐரோப்பிய கண்டத்திலுள்ள இலண்டன், பிரான்சு, சுவிட்சர்லாந்து,செருமணி ஆகிய நாடுகளுக்குப் பயணித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

21.10.1984ஆம் ஆண்டு
மீன்சுருட்டியில் சாதி ஒழிப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ”சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்” எனும் தலைப்பில் ஐயா எழுதிய நூல் வெளியிடப் பெற்றது. அதே நிகழ்ச்சியில் தோழர் தமிழரசன் அவர்கள் எழுதிய ”சாதி ஒழிப்பும், தேசிய இன விடுதலையும்” எனும் நூலும் முன்வைக்கப் பெற்றது.
11.11.1984ஆம் ஆண்டு
”ஒடுக்கப்படுவோர் உரிமை மீட்பு கூட்டமைப்பு” பாவலரேறு ஐயா அவர்களின் தலைமையில் தொடங்கப்பெற்றது.
09.12.1984ஆம் ஆண்டு
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், பெரியார் சம உரிமைக் கழகம், அறிவியக்கப்பேரவை, தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா.லெ.), நடுவண் சீரமைப்புக் குழு – ஆகிய இயக்கங்கள் இணைந்து ”தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி” எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் அமைப்புக் குழு பொறுபபாளராக ஐயா அவர்கள் செயல்பட்டார்கள்.
27,28.12.1986ஆம் ஆண்டு
தமிழின எதிர்காலத் தீர்மான மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார்.

27.11.1990ஆம் ஆண்டு
மாவீரர் நாளுக்கென சிறப்பு நிகழ்ச்சிக்கு பாவலரேறு ஐயா ”மாவீரர் நாளிலே மலர்க தமிழீழமே!” எனும் பாடலை தென்மொழியில் எழுதினார்.
02.12.1990ஆம் ஆண்டு
ஐயா அவர்கள் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களில் எழுதிய ”தமிழீழம்” எனும் தொகுப்பு நூல் வெளியிடப்பெற்றது.

20.04.1991ஆம் ஆண்டு
தமிழ்த்தேச தன்னுரிமை மாநாட்டை பழ.நெடுமாறன் ஒருங்கிணைக்கையில் மாநாடு தடை செய்யப்பட்டு பாவலரேறு உள்ளிட்ட 90 பேர் 7 நாள் சிறை வைக்கப்பட்டனர்.

01.09.1991ஆம் ஆண்டு
”தமிழீழ விடுதலை ஏற்பிசைவு (அங்கீகரிப்பு) மாநாடு” வேலூரில் தமிழ்நாடு இளைஞர் பேரவை நடத்தியது. இதனால் பொழிலன், தமிழ்முகிலன், பவணந்தி உள்ளிட்ட 73 பேர்கள் ஐயா உடன் தளைப்படுத்தப் பட்டனர்.
இட்ட சாவம் முட்டியது - பாவலரேறு
...”இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!...முட்டுக நின்னுயிர்!”

08.09.1991ஆம் ஆண்டு
தமிழர் பாதுகாப்பு மாநாடு எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் தமிழீழத்திற்கு ஆதரவாகவும் கொடியவன் இராசீவைக் கொன்ற ஈழ மரத்தி தனுவை பாராட்டி பேசியதன் காரணமாக 24.09.91ல் தளை செய்யப்பெற்று 15 நாள் கழித்து பிணையலில் விடுதலையானர்.

”அதோ என் தமிழரை சிங்களர் கொல்வார்!
ஆடும் என் சதை நரம்பு எல்லாம்!
அடடா! உலகம் கேட்டிடும் பார்த்திடும்!
ஆயினும் அதன்மனம் கல்லாம்!
இதோ, நான் ஒருவன் இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறைசெய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன்!
என்தலை! கொய்யினும் கொய்க!”
27.01.1993ஆம் ஆண்டு
தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கைக்காக தொடர்ந்து செயல்பட்டதால் ”தடா” சட்டத்தின் மூலம் பாவலரேறு, பழ.நெடுமாறன், பொழிலன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர் 7 மாதம் கழித்து ஐயா விடுதலை செய்யப்பட்டார்.

22.04.1995ஆம் ஆண்டு
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் கார்முகிலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

24.04.1995ஆம் ஆண்டு
தமிழே பயிற்று மொழி, ஆட்சிமொழி என வலியுறுத்தி தலைநகர் தமிழ்க் கழகம் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு சிறைபடுத்தப் பட்டார். இதுவே ஐயா அவர்கள் ஈடுபட்ட இறுதிப் போராட்டம்.
”எதுவரை எம்மூச்சு இயங்கு கின்றதோ-
எதுவரை எம்உடல் இம்மண் தோயுமோ-
எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ
அதுவரை மொழிஇன ஆர்ப்படங்காது!”

11.06.1995ஆம் ஆண்டு
ஐயா அவர்களுக்கு குருதி அழுத்தம் குறைவுற்றது, சிறுநீரகம் செயலிழந்தது. 11ஆம் நாளன்று ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் இத் தமிழ் பேருலகத்தை விட்டு மறைவுற்றார்.


”வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என் கொள்கை மாறேன்”
- பாவலரேறு.




”ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தா யிங்காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் – மண்டியிட்டால்
பெற்றவன்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றே தயக்கமின்றிச் சாற்று!”



அன்பார்ந்த தமிழர்களே!
தமிழகமும் தமிழீழமும் முற்றுமாய் விடுதலை அடைய வேண்டுமெனில் நாம் இனியும் சொரணையற்ற மக்களாய் வெறும் சோற்றுப் பிண்டங்களாய் வாழக்கூடாது. ”உரிமையை மீறிய ஒரு வளம் இல்லை” எனும் ஐயா பாவலரேறுவின் அறைகூவலை அவரது நினைவு நாளான இன்று நெஞ்சிலேந்தி சூளுரைப்போம்!
இந்தியாவிலிருந்து தமிழகத்தையும்
இலங்கையிலிருந்து தமிழீத்தையும் விடுவிப்போம்!


”வாட்டுகின்ற வறுமைக்கும் எந்தமிழர் அடிமையாய்
வாடுதற்கும், நீட்டுகின்ற வெடிகுழல்தான் - தமிழகத்தில்
நிகழ்த்தும் என்றால் காட்டுங்கள் தமிழ்மறத்தை!”
















1 கருத்து:

  1. பாவலரேறு அவர்களின் கனல் வரிகளை இன்றைய இளையோர் நெஞ்சில் ஏந்தி செயற்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு